68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியா மீண்டும் டாடா வசம்: ரூ.18,000 கோடிக்கு வாங்கியது..!

0 4961

ஏர்இந்தியாவை வாங்கும் ஏலத்தில் டாடா சன்ஸ் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. பிரிட்டிஷ் இந்தியாவில் டாடாவால் உருவாக்கப்பட்ட விமானப் போக்குவரத்து நிறுவனம், சுதந்திர இந்தியாவில் தேசியமயமாக்கப்பட்டு, 68 ஆண்டுகளுக்கு பின்  மீண்டும் டாடா வசமே செல்கிறது. 

1932ஆம் ஆண்டில், தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடாவால் தொடங்கப்பட்ட டாடா ஏர்லைன்ஸ், சுதந்திரத்திற்குப் பிறகு, 1953ஆம் ஆண்டில் தேசியமயமாக்கப்பட்டது. மகாராஜா சின்னத்துடன் உலகம் முழுவதும் பெருமையாக வலம் வந்த ஏர்இந்தியா நிறுவனம், நிர்வாகக் குளறுபடிகள், 1991-க்குப் பிறகு தனியாருடன் போட்டிபோட முடியாத நிலை உள்ளிட்ட காரணங்களால் படிப்படியாக இழப்பைச் சந்தித்து சுமார் 60 ஆயிரம் கோடி கடனில் மூழ்கியது.

ஏர்இந்தியாவை இயக்க, நாள்தோறும் 20 கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் நிதி நெருக்கடி இருந்தபோதிலும், இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் உள்நாட்டு முனையங்களிலும் சர்வதேச முனையங்களிலும் 6 ஆயிரத்து 200 லேண்டிங் மற்றும் பார்க்கிங் ஸ்லாட்டுகளை வைத்துள்ளது.

இந்நிலையில், ஏர் இந்தியாவில் நூறு விழுக்காடு பங்குகள், ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் ஐம்பது விழுக்காடு பங்குகளை விற்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. இந்த அடிப்படையில் ஏர் இந்தியாவை வாங்க டாட்டா குழுமமும், ஸ்பைஸ்ஜெட் தலைவர் அஜய் சிங்கும் இறுதி ஒப்பந்தப் புள்ளிகளை அளித்திருந்தனர்.

இதில், 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏர்இந்தியாவை கையகப்படுத்த, டாடா சன்ஸ் அளித்த ஒப்பந்தப் புள்ளிகள் ஏற்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏர்இந்தியாவை வாங்கும் ஏலத்தில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனர் அஜய்சிங் தலைமையிலான குழு 15 ஆயிரத்து 100 கோடி ரூபாய் என குறிப்பிட்டிருந்ததாகவும், டாடா சன்ஸ் 18 ஆயிரம் கோடி ரூபாய் என குறிப்பிட்டிருந்ததாகவும் மத்திய அரசின் முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மை துறை செயலர் தெரிவித்துள்ளார்.

2021 ஆகஸ்ட் நிலவரப்படி ஏர்இந்தியாவின் மொத்த கடன் 61 ஆயிரத்து 562 கோடி ரூபாய் என்றும், அதில், 15 ஆயிரத்து 300 கோடி ரூபாயை, ஏலத்தில் வெற்றிபெற்ற நிறுவனம் ஏற்கும் என்றும் அவர் கூறியுள்ளார். வரும் டிசம்பருக்குள் ஏர்இந்தியா டாடா சன்ஸ் வசம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஏர்இந்தியாவே மீண்டும் வருக என ரத்தன் டாடா ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments