அருணாச்சாலப்பிரதேச எல்லையில் அத்துமீறிய சீனப் படையினர்...ஊடுருவலை முறியடித்த இந்திய ராணுவம்

0 2301

அருணாச்சாலப்பிரதேச எல்லையில் கடந்த வாரத்தில் அத்துமீறிய சீனப் படையினரின் ஊடுருவலை இந்திய ராணுவம் முறியடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வீரர்கள் நேருக்கு நேர் நின்று, சீன வீரர்களை விரட்டியடித்த பதற்றமான தருணங்கள் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய-சீன எல்லையில், அருணாச்சலப்பிரதேசம் அமைந்துள்ள பகுதியில் இருதரப்பு வீரர்களிடையே கடந்த வாரம் மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதியில், Yangtse அருகே இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பிலும் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த படைவீரர்கள் நேருக்கு நேர் நிற்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

சீன ராணுவ ரோந்துக் குழு கணிசமான வீரர்களுடன் வந்திருந்த நிலையில், ஒருவருக்கொருவர் கைகலப்பில் ஈடுபட்டதாகவும், படைப்பிரிவு தலைவர்கள் தலையிட்டு கட்டுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த மோதல் சில மணி நேரங்களுக்கு நீடித்ததாகவும், இப்படிப்பட்ட சூழலில் பின்பற்றப்படும் வழக்கமான நடைமுறையின்படி மோதல் போக்கு விலக்கிக் கொள்ளப்பட்டு, சீன வீரர்கள் திருப்பிச் சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரப்பூர்வமாக எல்லை வரையறுக்கப்படாத நிலையில், கட்டுப்பாட்டு எல்லை குறித்து நிலவும் கருத்து வேறுபாடுகளால் இத்தகைய அத்துமீறல்கள் நிகழ்வதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரம் ஏற்பட்ட இந்த மோதலால், இந்திய வீரர்களுக்கோ கட்டமைப்புகளுக்கோ சேதம் எதுவும் இல்லை என்றும், தவாங் பகுதி இத்தகைய மோதல்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்புள்ள பகுதி என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் கடந்த வாரம் ஏற்பட்டது போன்ற மோதல், 2016-க்குப் பிறகு இதுவே முதல் முறை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments