டாக்டர் மாப்பிள்ளையா..? டார்ச்சர் மாப்பிள்ளையா..? டுவின்ஸ் பேபியுடன் தவிக்கும் மனைவி..! ஆஸ்பத்திரி கட்டி கொடுக்கனுமாம்..!

0 4097
டாக்டர் மாப்பிள்ளையா..? டார்ச்சர் மாப்பிள்ளையா..? டுவின்ஸ் பேபியுடன் தவிக்கும் மனைவி..! ஆஸ்பத்திரி கட்டி கொடுக்கனுமாம்..!

சென்னையில் 200 சவரன் வரதட்சணை கேட்டு , இரட்டை குழந்தை பெற்ற மனைவியை கொடுமைப்படுத்தியதாக தனியார் மருத்துவ கல்லூரி பேராசிரியரும் மருத்துவருமான வினோத்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் 

சென்னை கொளத்தூர் திருமுருகன் நகரைச் சேர்ந்தவர் வினோத் குமார். மருத்துவரான இவர், தனியார் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மோனிகா ஸ்ரீ, இந்த தம்பதிக்கு பிறந்து ஏழுமாதமேயான அஷ்வத் - அஸ்வின் என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் மோனிகா ஸ்ரீ மருத்துவரான தனது கணவர் மீதும் தனது கணவரின் குடும்பத்தினர் மீதும வரதட்சணை புகார் அளித்திருந்தார்.

கோவையை பூர்வீகமாகக் கொண்ட மோனிகா ஸ்ரீ அவரது பெற்றோருக்கு ஒரே மகள். பொறியியல் முடித்துவிட்டு ஐஏஎஸ் ஆக வேண்டும் என சென்னையில் உள்ள சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் படித்துவந்த நிலையில், மோனிகா ஸ்ரீ, அவரது பெற்றோர் மேட்ரிமோனியல் மூலம் வரன் பார்த்து மருத்துவர் வினோத்குமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவர்கள் திருமணம் நடப்பதற்கு முன்பு நிச்சயதார்த்தம் நடக்கும் போதே டாக்டர் மாப்பிள்ளை என்பதால் 200 சவரன் நகை போட வேண்டும் என டாக்டர் வினோத் குமார் குடும்பத்தினர் வரதட்சனை கேட்டதாக கூறப்படுகிறது.

பெண் வீட்டாரோ தங்களிடம் உள்ள கோடிக்கணக்கான சொத்து தங்களது ஒரே மகளுக்கு தான் எனவும், தற்போது 120 சவரன் நகை போடுவதாகவும் பின்னர் 80 சவரன் நகை செய்து தருவதாகவும் கூறி திருமணத்தை முடித்துள்ளனர். திருமணம் முடிந்து சென்னைக்கு வந்த பிறகு மோனிகா ஸ்ரீ அவரது கணவரும், கணவரின் குடும்பத்தாரும் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. டாக்டர் வினோத்குமாரின் தந்தை கண்டீபன், தாய் ரமணி, தம்பி கௌஷிக் ஆகியோருடன், அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வினோத் குமாரின் சித்தப்பா பி.ஆர் ரவி, மாமா நெடுமாறன், பெரியப்பா பார்த்திபன் குடும்பத்தினரும் மோனிகாஸ்ரீயை துன்புறுத்தி வந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் மோனிகா ஸ்ரீயின் அனுமதி இல்லாமல் சில மாத்திரைகளை டாக்டர் வினோத்குமார் வலுக்கட்டாயமாக கொடுத்ததாகக் கூறப்படும் நிலையில், பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டிற்கு மோனிகா ஸ்ரீ சென்றுவிட்டார். அப்போது வினோத் குமாரின் குடும்பத்தினர் பெண் வீட்டாரை தொடர்பு கொண்டு, உங்கள் பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்து விடுங்கள் 200 சவரன் நகையுடன் சொந்தமாக மருத்துவமனையை கட்டித் தருவதற்கும் நிறைய பேர் இருக்கிறார்கள் என கூறி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அதற்கு மோனிகா ஸ்ரீயின் பெற்றோர் தங்களது ஒரே மகளின் வாழ்க்கை வீணாகிவிடும் மீதமுள்ள 80 சவரன் நகையும் தந்து விடுகிறோம் என கூறி சமாதானம் செய்துள்ளனர்.

சில மாதங்கள் கழித்து மோனிகா ஸ்ரீக்கு இரட்டை குழந்தைகள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிறந்து உள்ளது. அப்போது வினோத் குமாரின் குடும்பத்தினர் குழந்தையை பார்க்க சென்ற போது, தான் கொடுத்த மாத்திரையை சாப்பிட்டதால் உனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக கூறி அதிரவைத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் இரட்டை குழந்தைகளுடன் மோனிகா ஸ்ரீ கணவர் வீட்டுக்கு வந்த நாளிலிருந்து ஒன்றரை கோடி ரூபாய் மருத்துவமனை கட்டுவதற்கும், 80 சவரன் நகை இருந்தால் மட்டுமே இங்கு வாழ முடியும் என மீண்டும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

மேலும், யுபிஎஸ்சி முதல் நிலைத் தேர்வில் வெற்றி பெற்றிருந்த மோனிகாஸ்ரீ முதன்மைத் தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருந்தார். அதற்கும் தடை போட்ட வினோத்குமார், படிப்பை நிறுத்தினால் மட்டுமே தன்னுடன் சேர்ந்து வாழலாம் என பிளாக்மெயில் செய்ததாகவும் கூறப்படுகிறது. இரட்டைக் குழந்தைகளை வைத்துக்கொண்டு, கணவர் வீட்டாரின் எல்லாக் கொடுமைகளையும் ஒரு அளவிற்கு மேல் தன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என கூறும் மோனிகா, கடந்த ஜூலை மாதம் வில்லிவாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த நிலையில் மருத்துவர் வினோத் குமார், தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ள சித்தப்பா வி.ஆர்.ரவி, நந்தனம் அரசு கலைக் கல்லூரி பேராசிரியராக உள்ள அவரது பெரியப்பா பார்த்திபன் உள்ளிட்ட 8 பேர் மீது வரதட்சணை புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் தலைமறைவான, டாக்டர் வினோத் குமாரின் குடும்பத்தினர் 8 பேரையும் தேடி வருவதாக, விசாரணை நடத்தி வரும் வில்லிவாக்கம் மகளிர் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments