தலைதூக்கும் பயங்கரவாதிகள்.! தடையறத் தாக்க உத்தரவு... அமித்ஷா 5 மணி நேரம் ஆலோசனை

0 2273

காஷ்மீரில் அப்பாவிகள் மற்றும் சிறுபான்மையினர் கொல்லப்படுவதை  இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குமாறு, உறுதியான உத்தரவுகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறப்பித்துள்ள நிலையில், பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தி வரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற குழுக்களை ஒடுக்கும் உள்ளூர் போலீசாருக்கு உதவ, தீவிரவாத எதிர்ப்பு வல்லுநர்கள் காஷ்மீர் அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் பெருமளவில் காஷ்மீருக்கு செல்லத் தொடங்கியுள்ளதால், ஸ்ரீநகரில் உள்ள அனைத்து ஹோட்டல்களும் நிரம்பி வழிகின்றன. அங்கு, பொருளாதாரம் மீட்சியடைய தொடங்கியுள்ள நிலையில், அப்பாவிகளை குறி வைத்து பயங்கரவாதத் தாக்குதல்கள் தலைதூக்கியுள்ளன. பாகிஸ்தானின் லஷ்கர் அமைப்பால் இயக்கப்படும், டிஆர்எஃப் என்ற தீவிரவாதிகள் குழு, காஷ்மீரி பண்டிட் சமூகத்தை சேர்ந்த வணிகர், பீகாரை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி, சீக்கிய சமூகத்தை சேர்ந்த பள்ளி முதல்வர், பண்டிட் சமூகத்தை சேர்ந்த ஆசிரியர் உள்ளிட்ட 5 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

பண்டிட்டுகள் உள்ளிட்ட சிறுபான்மையினர் காஷ்மீருக்கு திரும்புவதை தடுப்பதும், மீறி வர நினைப்பவர்களை அச்சுறுத்துவதுமே தீவிரவாதிகளின் புதிய திட்டம் என பாதுகாப்புத்துறை வல்லுனர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடந்த சில நாட்களில் நிகழ்ந்த தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட பிஸ்டல்கள், எல்லைக்கு அப்பால் இருந்து வந்த டிரோன்கள் எல்லையோரம் வீசிச்சென்றவை என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து, அமெரிக்க தயாரிப்பு அதிநவீன துப்பாக்கிகள், எறிகுண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்டவற்றை பாகிஸ்தான் தீவிரவாத குழுக்கள் காஷ்மீருக்குள் கடத்த முயற்சிக்கலாம் என்பதுதான் கவலைக்குரிய விஷயம் என்றும் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதையடுத்தே, தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாடுமாறு பாதுகாப்பு படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காஷ்மீர் நிலவரம் தொடர்பாக அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை சுமார் 5 மணி நேரம் தொடர் ஆலோசனை நடத்திய நிலையில், பல்வேறு தேசிய பாதுகாப்பு முகமைகளை சேர்ந்த, பயங்கரவாத எதிர்ப்பு வல்லுநர்கள் காஷ்மீர் சென்றுள்ளனர். தீவிரவாதிகளுக்கு எதிரான பலமுனை தாக்குதல்களை கண்காணிக்க, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான உளவுப்பிரிவு தலைவர் Tapan Deka-வும் காஷ்மீர் செல்கிறார்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ளது, அதன் மூலம் பாகிஸ்தானின் மறைமுக விரலசைவின் கீழ் ஆப்கானிஸ்தான் வந்துள்ளது, புதிய ஐஎஸ்ஐ தலைவராக நதீம் அஞ்சும் நியமிக்கப்பட்டுள்ளது ஆகியவை பாகிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்கு புதிய நம்பிக்கை அளித்துள்ளதன் விளைவே காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதற்கு காரணம் என பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments