மாமியாரைக் கொன்ற மருமகள்.. கள்ளக்காதலனுடன் சேர்ந்து சதி.. இருவருக்கும் ஜாமீன் மறுப்பு..!

0 11902

ராஜஸ்தானில் நச்சுப் பாம்பை வீட்டில் விட்டு மாமியாரைக் கொன்ற மருமகளுக்கும் அவளுக்கு உதவிய கள்ளக் காதலனுக்கும் ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் ராணுவ வீரரைத் திருமணம் செய்துகொண்ட ஒரு பெண், கணவரும் மாமனாரும் வெளியூரில் பணியாற்றும் நிலையில் கள்ளக்காதலனுடன் அடிக்கடி செல்பேசியில் பேசி வந்துள்ளார்.

இதை மாமியார் கண்டித்ததால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து சதி செய்து ஒரு நச்சுப் பாம்பை வாங்கிப் பையில் கொண்டுவந்து இரவில் மாமியார் படுத்துறங்கிய அறையில் கொண்டுபோய் விட்டுவிட்டார். மாமியார் பாம்பு கடித்து இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் பாம்பு கடித்து இறக்கும் நிகழ்வுகள் அதிகம். எனினும் இந்த வழக்கில் சந்தேகமடைந்த காவல்துறையினர் மருமகளின் செல்பேசியை ஆய்வு செய்ததில் அவர் குறிப்பிட்ட நாள் இரவில் கள்ளக்காதலனுடன் நூற்றுக்கு மேற்பட்ட முறை பேசியுள்ளதும், அவனுடன் நெடுங்காலமாகத் தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து விசாரித்ததில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து சதி செய்து மாமியாரைக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து மருமகள், அவளது கள்ளக்காதலன், பாம்பாட்டி என மூவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

2018 ஜூனில் நடந்த இந்தக் கொலை வழக்கில் பாம்பாட்டி அப்ரூவர் ஆனார். இந்த வழக்கில் கள்ளக்காதலனுக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், குற்றம் நிகழ்ந்தபோது தனது கட்சிக்காரர் அங்கு இல்லை என்றும், பாம்பு யாரைக் கடிக்கும் எனத் தெரியாதபோது அவர் எப்படி சதி செய்ததாகக் கருத முடியும் என்றும் தெரிவித்தார்.

ஒரு பாம்பை அறையில் விட்டால் யாரைக் கடிக்க வேண்டும் என அதற்கு எப்படித் தெரியும் என்றும் வினவினார். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த நீதிபதிகள்,கொலைக்குப் பாம்பைப் பயன்படுத்துவது ராஜஸ்தானில் பொதுவானது என்றாலும்,  கொடிய குற்றமிழைக்கப் புதிய உத்தியைக் கையாண்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

சதியில் பங்கேற்றுப் பாம்பை வாங்கிக் கொடுத்த கள்ளக்காதலனை ஜாமீனில் விட முடியாது என மறுத்துவிட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments