சடலத்தின் மீது அமர்ந்து அகோரிகளின் சிவ பூஜை..! திருச்சி மயானத்தில் திகில்

0 3989
சடலத்தின் மீது அமர்ந்து அகோரிகளின் சிவ பூஜை..! திருச்சி மயானத்தில் திகில்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மயானத்தில் விபத்தில் உயிரிழந்தவரின் சடலத்தின் மீது ஏறி அமர்ந்து அகோரி ஒருவர் ஆன்ம சாந்தி பூஜை செய்து திகிலூட்டினார்

திருச்சி மாவட்டம் மணிகண்டம் குடிசை மாற்று வாரியத்தில் வசித்துவந்த வெங்கடேஷ் என்பவர் சில தினங்களுக்கு முன்பு கேரளா மாநிலம் பாலக்காட்டில் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். அவரது உடல் இறுதி சடங்கிற்காக திருச்சி அரியமங்கலத்தில் உள்ள சமுதாய நல்லிணக்க சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

காசியில் பயிற்சிபெற்று, திருச்சி அரியமங்கலத்தில் ஜெய் அகோர காளி சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வரும் அகோரி மணிகண்டன், தன் சிஷ்ய அகோரிகளுடன் உடல் முழுவதும் திருநீறு அணிந்து கொண்டு மயானத்தில் கூடியிருந்தனர். மயானத்தில் வெங்கடேசனின் குடும்பத்தினர் செய்ய வேண்டிய இறுதி சடங்கை முடித்தபிறகு, அகோரி மணிகண்டன் சடலத்தின் மீது அமர்ந்து மந்திரங்கள் ஜெயித்து ஆன்ம சாந்தி பூஜை செய்தார்.

அப்போது சக அகோரிகள் டம்ரா மேளம் அடித்தும் சங்கு ஒலி எழுப்பியும் பூஜையில் ஈடுபட்டனர். மேலும் ஒரு அகோரி நான் கடவுள் படத்தில் வருவது போன்று தலைகீழாக நின்று பூஜை செய்தார்.இறுதியில் இறந்தவரின் உடலுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அகோரிகள் அனைவரும் ஹர ஹர மகாதேவா என முழங்கினர்.

இறந்த வெங்கடேஷ் ஏற்கனவே அகோரி மணிகண்டனிடம் சிஷ்யராக இருந்துள்ளார். இதன் காரணமாகவே காசியில் மட்டுமே காணகூடிய இந்த ஆன்ம சாந்தி பூஜையானது , அவரது குடும்பத்தினரின் அனுமதியோடு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அகோரி மணிகண்டன் கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு தனது தாயின் இறந்த உடல் மீது அமர்ந்து இதேபோன்று ஆன்ம சாந்தி பூஜை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்ம சாந்தி பூஜை என்பது இறந்தவர்கள் உடலின் மீது அமர்ந்து பூஜை செய்யும்போது அவர்களின் ஆன்மாக்களுக்கு முக்தி கொடுப்பதற்காக அகோரிகளால் செய்யப்படும் பூஜை என அகோரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments