பார்ட்னர் யோகாவாம்..! யோக ராசாவுக்கு கம்பி எண்ணும் யோகம்..! பெண்களின் வாழ்கையோடு விளையாட்டு

0 2831
பார்ட்னர் யோகாவாம்..! யோக ராசாவுக்கு கம்பி எண்ணும் யோகம்..! பெண்களின் வாழ்கையோடு விளையாட்டு

யோகாவில் கின்னஸ் சாதனை புரிந்த யோகா பயிற்சியாளரான போலிச் சாமியாரை பாலியல் பலாத்கார வழக்கில் சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். யோகா கற்றுக் கொள்ளச் சென்ற பெண்ணிற்கு, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அத்துமீறியதோடு, அதனை வீடியோ எடுத்து வைத்து மிரட்டிய சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த 21 வயது பெண், மருத்துவ துறையில் வேலை பார்த்த வருகிறார். அந்த இளம் பெண் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், பிரபல யோகா பயிற்சியாளர் யோகராஜ் என்ற பூவேந்திரன் சிதம்பரம், கடந்த 2015-ஆம் ஆண்டு ஹாங்காங்கில் தொடர்ந்து 40 மணி நேரம் யோகா பயிற்சி மேற்கொண்ட காரணத்தினால் கின்னஸ் சாதனை படைத்தவர்.

இவற்றை பார்த்து யோகா பயிற்சியாளர் யோகராஜிடம், யோகா கற்றுக்கொள்ள சென்றதாகவும், பார்ட்னர் யோகா என்ற பெயரில் தன்னை தொட்டு பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து தன்னை காதலிப்பதாக கூறி ஆசை வார்த்தைக் காட்டி பழகி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். தன்னுடைய பிறந்த நாளுக்காக வீட்டுக்கு அழைத்ததாகவும், அப்போது யோகா பயிற்சியாளர் யோகராஜ் குளிர்பானத்தில் மயக்க மருந்துக் கொடுத்து பலாத்காரம் செய்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அதை வீடியோவாக எடுத்து வைத்து தொடர்ந்து தன்னை மிரட்டி வந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

தன்னிடம் மட்டுமல்லாமல் யோகா பயிற்சிக்கு வரும் பல பெண்களிடம் இதுபோன்று தவறாக நடந்து கொண்டுள்ளதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பான ஆடியோ மற்றும் வீடியோ வாட்ஸப் சாட் ஆதாரங்களை போலீசாரிடம் புகாருடன் அளித்துள்ளார்.

இந்த புகாரை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்திய மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார், யோகராஜை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இளம்பெண் கொடுத்த பாலியல் புகார் உறுதியானதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பாலியல் பலாத்காரம், மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட யோகராஜா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்

தன்னை சாமியார் என அழைத்துக் கொள்ளும் யோகராஜ் பூவேந்திரன், ஏராளமான பெண்களிடம் யோகா பயிற்சி அளிப்பதாக கூறி மோசடி செய்திருப்பதாக பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியிருப்பதால், யோகா மாஸ்டர் என்ற பெயரில் வில்லங்க வேலை பார்த்த யோகராஜாவை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.  அதே நேரத்தில் யோகா உள்ளிட்ட பயிற்சிகளுக்கு செல்லும் பெண்கள் தங்களிடம் அத்துமீறும் பயிற்சியாளருக்கு ஆரம்பத்திலேயே சட்டத்தால் சூடுவைக்க தவறி காதலில் விழுந்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments