துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்.. சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்..!

0 2517
துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்.. சினிமா பாணியில் விரட்டி பிடித்த போலீசார்..!

சென்னையில் பணத்திற்காக துப்பாக்கி முனையில் தொழிலதிபரை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பலை, சினிமா பாணியில் போலீசார் விரட்டி மடக்கி பிடித்தனர்.

சென்னை சேத்துப்பட்டை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் மூசா. இவர் பல்வேறு தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் ஈசிஆரில் உள்ள தனது மகன் பஷீர் வீட்டுக்கு சென்று விட்டு சேத்துப்பட்டு திரும்பிக் கொண்டிருந்த போது, இவரிடம் ஏற்கனவே பணியாற்றிய குமார் என்கிற அருப்பு குமார் உட்பட 5 பேர் கொண்ட கும்பல், வீட்டு வாசல் அருகே அவரை காரில் கடத்தி போரூர் அழைத்துச் சென்றுள்ளனர். மூசா தனது காரில் உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியை வைத்தே மிரட்டி கடத்தியுள்ளனர்.

போரூரில் செட்டியார் அகரம் என்ற பகுதியில் உள்ள தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் தொழிலதிபர் மூசாவை அடைத்து வைத்திருந்தனர். அதன் பின் மூசாவின் செல்போன் மூலம் அவரது மகன் பஷீருக்கு போன் செய்து 5 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், சினிமா ஒன்றில் வரும் கடத்தல் காட்சி போல், பேரம் பேச ஆரம்பித்துள்ளனர். பின் மூன்று கோடி இரண்டு கோடி, ஒரு கோடி, 50 லட்சம் எனப் படிப்படியாக குறைத்து இறுதியாக 25 லட்சம் தருமாறு மிரட்டியுள்ளனர்.

பின்னர் பணத்தை எடுத்துக்கொண்டு திங்கள்கிழமை தாம்பரம் அருகே வருமாறு கூறிவிட்டு, போனை சுவிட்ச் ஆப் செய்தனர். இதனையடுத்து பஷீர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் தாம்பரத்திற்கு சென்றுள்ளனர். ஆனால் கடத்தல்காரர்கள் அங்கு வரவில்லை.

செவ்வாய்கிழமை மீண்டும் மூசாவின் செல்போனில் இருந்து பேசிய கடத்தல்காரர்கள் எக்மோர் அல்சா மால் அருகே 25 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து வரச்சொல்லியுள்ளனர். அதன்படி கடத்தல்காரர்கள் பணத்தை பெற முயன்ற போது, அங்கு மறைந்திருந்த போலீசார் எழும்பூர் கோ ஆப் டெக்ஸ் சிக்னல் அருகே சினிமா பாணியில் அவர்களை விரட்டினர். அந்த காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

காவலர் ஒருவர் காரின் பேனட் மீது தாவி ஏறி காரை நிறத்த முயன்ற போதும், காரை கடத்தல்காரர்கள் ஓட்டிச் சென்ற காட்சியும் அதில் பதிவாகி இருந்தது. காருக்குள் இருந்த குமார் என்கிற அறுப்பு குமார் மற்றும் பிரகாஷ் ஆகியோர் போலீசாரிடம் பிடிபட்டனர். மற்றொரு காரில் இருந்த மூன்று பேர் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 2 கடத்தல்காரர்களை சேத்துப்பட்டு காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர்.

சந்தன மரம், செம்மரம் ஏற்றுமதி உள்ளிட்ட பல தொழில்களை மூசா செய்து வருவதையும், அதில் நிறைய பணம் இருப்பதையும் தெரிந்து கொண்ட குமார் அவரை கடத்தி பணம் பறிக்க முயன்றதாக கூறியிருக்கிறான். மூசாவிடம் நீண்டகாலமாக பணிபுரிந்து வந்த அறுப்பு குமார், தான் வேலை பார்த்ததற்கு முறையாக சம்பளமும் கொடுக்கவில்லை என அதிருப்தியில் இருந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளான்.

கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சங்கீதா மற்றும் அவரது கணவர் காந்தி ஆகியோர் நடத்தி வரும் தனியார் போதை மறுவாழ்வு மையத்தில் மூசா கட்டி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்ததை அடுத்து அங்கு சென்று அவரை மீட்ட போலீசார், சங்கீதாவை கைது செய்தனர்.

கடத்தலில் ஈடுபட்ட காந்தி, வினோத், மணி ஆகியோர் தப்பி விட்டதால், அவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து 25 லட்சம் ரூபாய் பணம், கடத்தலுக்கு பயன்படுத்திய கார் மற்றும் துப்பாக்கி, கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments