தடையை மீறி லக்கிம்பூர் பயணம்... கைதாவாரா ராகுல்?

0 1556

உத்தரப்பிரதேசத்தில் காரை ஏற்றிக் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க லக்கிம்பூருக்கு ராகுல்காந்தி செல்வதற்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. ஆனால் தடையை மீறி லக்கிம்பூருக்கு டெல்லியில் இருந்து ராகுல் காந்தி புறப்பட்டுள்ளார்.

லக்கிம்பூர் நிகழ்வு குறித்த காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ், தனது வாகனத்தில் இடப்புற இருக்கையில் அமர்ந்திருந்ததாகவும், காரைக் கொண்டு விவசாயிகளின் மீது மோதியதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆசிஷ் துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி குர்வீந்தர் சிங் உயிரிழந்ததாகவும், ஆசிசுடன் வந்த மேலும் 3 கார்கள் சாலையின் இருபுறமும் நின்ற விவசாயிகள் மீது வேகமாக மோதியதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதில் வாகனங்கள் கவிழ்ந்ததாகவும், அப்போது சாலையோரம் நடந்து சென்றவர்களும் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. துப்பாக்கியால் சுட்ட ஆசிஷ் கரும்பு வயலுக்குள் ஓடிச் சென்று தப்பிவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளது. இவையனைத்தும் முன்கூட்டித் திட்டமிட்ட சதி எனக் குறிப்பிட்டுள்ளது.

விவசாயிகள் மீது கார் மோதிய வீடியோ காட்சி வெளியான நிலையில் அது குறித்துக் கருத்துத் தெரிவித்த மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா, விவசாயிகள் மீது மோதிய கார் தங்களுடையதுதான் என்றும், ஆனால் அப்போது அதில் தன் மகன் இருக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். நிகழ்வு நேர்ந்த நேரத்தில் தன் மகன் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மற்றொரு நிகழ்ச்சியில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

லக்கிம்பூரில் மத்திய அமைச்சரின் கார் மோதியதில் உயிரிழந்த மூவரின் உடல்களும் தகனம் செய்யப்பட்டது. குர்வீந்தர் சிங்கின் கூறாய்வு அறிக்கையில், துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் குறிப்பிடாததால் அவர் உடலை இன்னும் தகனம் செய்யவில்லை. இந்த வழக்கில் இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், இது குறித்து விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத் பேட்டியளித்தார். மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என்றும், அவர் மகனை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், இல்லையெனில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஒருவாரத்தில் கூடிப் பேசி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூரில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை இன்று சந்தித்துப் பேச புறப்பட்டுள்ளார். அவருடன் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாகல், பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் ஆகியோரும் அங்கு செல்கின்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, மத்திய அமைச்சரின் மகன் மீது கொலை வழக்குப் பதிந்துள்ளது குறித்துப் பிரதமர் கருத்துத் தெரிவிக்காததையும், நேற்று லக்னோவுக்குச் சென்ற பிரதமர் லக்கிம்பூருக்குச் செல்லாததையும் சுட்டிக்காட்டினார். 

லக்கிம்பூருக்கு ராகுல்காந்தி செல்ல அரசு அனுமதி மறுத்துள்ளதாகவும், அவர் லக்னோவுக்கு வந்தால் அவரைத் தடுத்து நிறுத்தி லக்கிம்பூருக்கும், சீதாப்பூருக்கும் செல்ல வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளும்படி இரு மாவட்ட ஆடசியர்களும் காவல் கண்காணிப்பாளர்களும் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் லக்னோ காவல் ஆணையர் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments