உள்ளாட்சித் தேர்தல் : முதற்கட்ட வாக்குப்பதிவு.. ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து வாக்குகளை செலுத்திய வாக்காளர்கள்..!

0 2716

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வமுடன் வரிசையில் காத்திருந்து வாக்களிக்கின்றனர். 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 39 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 78 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 755 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 1,577 கிராம ஊராட்சி தலைவர், 12,252 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.

இதற்காக 7,921 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட தேர்தலில் 41 லட்சத்து 93 ஆயிரத்து 996 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். தேர்தலில் 41,500 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவை முன்னிட்டு வாக்குச்சாவடிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் மழையையும் பொருட்படுத்தாமல் வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். கடைசி ஒருமணி நேரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும், அதற்கான அறிகுறி உள்ளவர்களும் வாக்களிக்க பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, மானூர், பாளையங்கோட்டை, பாப்பாக்குடி ஆகிய 5 ஒன்றியங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. 3லட்சத்து 48ஆயிரத்து 612 பேர் வாக்களிக்களிக்கின்றனர்.

காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத் ஆகிய மூன்று ஒன்றியங்களுக்கு நடைபெற்று வரும் முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 3லட்சத்து 15ஆயிரத்து 815 பேர் வாக்களிக்கின்றனர். 

செங்கல்பட்டு மாவட்டத்தில் இலத்தூர், புனித தோமையார்மலை, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய 4 ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 6லட்சத்து 59ஆயிரத்து387 வாக்காளர்கள் வாக்களிக்கின்றனர். 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு, திமிரி, வாலாஜா ஆகிய 3 ஒன்றியங்களில் நடைபெற்று வரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 2 லட்சத்து97 ஆயிரம் பேர் வாக்களிக்கின்றனர். 

தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர், மேல்நீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய 5 ஒன்றியங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் குடியாத்தாம், கே.வி.குப்பம், பேர்ணாம்பட்டு, காட்பாடி ஆகிய 4 ஒன்றியங்களில் மொத்தமாக 4லட்சத்து 63 ஆயிரம் பேர் வாக்களிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம், திருநாவலூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை ஆகிய 4 ஒன்றியங்களில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 4லட்சத்து 73ஆயிரத்து464 பேர் வாக்களிக்கின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட அங்கனூரில் வாக்களிக்க வந்த பெண்ணை, வேட்பாளர்களின் முகவர்கள் தடுத்து நிறுத்தி வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. குணசுந்தரி என்ற அந்த பெண், திருமணமாகி வேறு ஊருக்கு சென்றுவிட்ட நிலையில், அங்கனூர் கிராமத்திலுள்ள வேட்பாளர் பட்டியலிலேயே அவர்
பெயர் இடம்பெற்றிருந்துள்ளது. இதனால், அவர் அங்கனூரிலுள்ள வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேட்பாளர்களும், அவர்களது முகவர்களும் அவரை வெளியேற்றினர்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கும் போது ஏன் வாக்களிக்க அனுமதிக்கக் மாட்டீர்கள் எனக் கூறி குணசுந்தரியின் உறவினர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இருதரப்பினர் இடையே கைகலப்பு உருவானது.

பின்னர் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தி குணசுந்தரியை அதே வாக்குச்சாவடியில் வாக்களிக்கச் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments