கசந்து போன காதல்.. கதையை முடித்த காதலன்.. அரசுப் பேருந்தில் ஒரு கொலை..!

0 4017
கசந்து போன காதல்.. கதையை முடித்த காதலன்.. அரசுப் பேருந்தில் ஒரு கொலை..!

உயிருக்கு உயிராக காதலித்த காதலி தன்னை விட்டுவிட்டு வேறொரு நபருடன் பேசி வந்ததால் ஆத்திரமடைந்த இளைஞன், அவரை அரசு பேருந்தில் வைத்து சக பயணிகள் முன் பட்டப்பகலில் கழுத்தை அறுத்துக் கொலை செய்த பயங்கரம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. கழற்றிவிட்ட காதலியின் கதையை முடித்த காதலனின் வெறிச்செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

கர்நாடகா மாநிலம் மங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 28 வயதான பிரவீன் காம்ப்ளே என்ற இளைஞரும், படா கிராமத்தைச் சேர்ந்த அவரது அத்தை மகள் 30 வயதான வந்தனாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் உறவினர்கள் என்பதால் எல்லைமீறி கணவன், மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், காதலும், காமமும் கசந்து போக, பிரவீனுடன் பேசுவதை சிறுக, சிறுக வந்தனா குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

காதலி தன்னை விட்டு விலகுவதை பொறுத்துக் கொள்ள முடியாமலும், அதற்கு காரணம் தெரியாமலும் அடிக்கடி சண்டையிட்டு வந்த பிரவீனுக்கு, வந்தனா வேறொரு நபருடன் பேசி, பழகி வந்தது பின்னாளில் தெரியவந்திருக்கிறது. ஆத்திரமடைந்த பிரவீன் வந்தனாவை அழைத்து நல்ல முறையில் எடுத்துக் கூறி அந்த நபருடனான பேச்சுவார்த்தையை துண்டித்துக் கொள்ளுமாறு கூறியிருக்கிறார். ஆனால், அதனை வந்தனா கொஞ்சம் கூட சட்டை செய்யாத நிலையில், இருவருக்கும் இடையேயான விரிசல் அதிகரித்துள்ளது.

இந்த விரக்தியில் காதலியை கொலை செய்ய திட்டமிட்ட பிரவீன், சங்கேஷ்வரா நகரிலிருந்து படா கிராமத்திற்கு அரசு பேருந்தில் வந்தனா சென்ற போது தானும் பேருந்தில் ஏறி சென்றிருக்கிறான். அங்கு, வந்தனாவுடன் தகராறில் ஈடுபட்ட பிரவீன், திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மிரட்டியுள்ளான்.

பேருந்தில் பயணம் செய்த சக பயணிகள் இதனை தடுக்க முயன்ற நிலையில், அரிவாளைக் காட்டி பிரவீன் மிரட்டியதால் அவர்கள் யாரும் கிட்டக் கூட நெருங்கவில்லை. ஓட்டுநரும் பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கிவிட்டார். பின்னர், வந்தனாவை கதற, கதற பிரவீன் கழுத்தை அறுத்துக் கொலை செய்த காட்சிகளை அங்கிருந்தவர்கள் வீடியோவாகவும் பதிவு செய்திருக்கின்றனர்.

கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, வந்தனாவின் சடலத்தை பேருந்திலிருந்து கீழே தள்ளிவிட்ட பிரவீன், படிக்கட்டில் நின்று போஸ் கொடுத்துக் கொண்டிருந்தான். இதனையடுத்து, சக பயணிகள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் பிரவீனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் பல பேர் முன்னிலையில் அரங்கேறிய இந்த கொடூரக் கொலை கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments