எஸ்கேப் காதலனுக்கு நீதிமன்ற கோவிலில் ,எஸ்கார்டுடன் டும் டும்..! கர்ப்பிணி காதலிக்கு கிடைத்தது நீதி

0 3300

புதுக்கோட்டை அருகே காதலியை கர்ப்பிணியாக்கிவிட்டு திருமணத்துக்கு மறுத்து சிறை சென்ற இளைஞர், ஜாமீனில் வெளியே வந்த நிலையில் நீதிபதியின் எச்சரிக்கையை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள கோவிலில் வைத்து காதலிக்கு தாலிகட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.  சுதந்திர புலியாக நினைத்து சூடுபட்ட பூனை சட்டத்தின் பிடியில் சிக்கி தாலி கட்டிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் வடக்கிபட்டியை சேர்ந்த கஸ்தூரி, தூரத்து உறவினர் ராம்கி என்பவரைக் காதலித்து வந்தார். கஸ்தூரி இரண்டு மாத கர்ப்பமான நிலையில், அவரைத் திருமணம் செய்ய ராம்கி மறுத்து 'எஸ்கேப்' ஆனதாகக் கூறப்படுகின்றது.

இது குறித்து கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில், பலாத்கார வழக்கில் ராம்கி கைது செய்யப்பட்டார்.

ஆலங்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு, கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படாததால் ராம்கி ஜாமீன் பெற்று வெளியே வந்தார்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் திங்களன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது கர்ப்பிணியான கஸ்தூரியும் நீதிமன்றம் வந்திருந்தார். வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி அப்துல் காதர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். ராம்கி, கஸ்தூரியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் இல்லை என்றால் ராம்கி சிறைக்கு செல்ல நேரிடும் என்று எச்சரித்தார்.

இருதரப்பினரும் சமரசமாக பேசி தீர்வு காணவேண்டும் என்று கூறியதோடு இரு தரப்பு வழக்கறிஞர்களும் கவுன்சிலிங்கிற்கு ஏற்பாடு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஜெயிலுக்கு போக அஞ்சிய ராம்கி , சமரச பேச்சுவார்த்தையில் காதலி கஸ்தூரியை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திலேயே உள்ள விநாயகர் கோவிலில் இருவருக்கும் போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் நடைபெற்றது இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர். பின்னர் கஸ்தூரிக்கு ராம்கி மஞ்சள் தாலி கட்டினார்.

சட்டத்தின் ஓட்டையில் புகுந்து எப்படியாவது எஸ்கேப் ஆகி விடலாம் என்று நீதிமன்ற படிக்கட்டு ஏறிய காதலனை, சாட்டையடியான உத்தரவால் ஒரே நாளில் கர்ப்பிணியின் வாழ்க்கைக்கு நீதி வழங்கி இருக்கின்றது நீதிமன்றம் என்று சுட்டிக்காட்டுகின்றனர் சட்ட நிபுணர்கள்.

அதே நேரத்தில் ஆரம்பத்திலேயே காதலியை திருமணம் செய்திருந்தால் மாப்பிள்ளை சில காலம் சிறைபறவையாய் ஜெயிலில் தவித்த சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments