அஜீத் உதவி பண்ணுங்க இல்லைன்னா தீக்குளிப்பேன்..! இதென்ன கலாட்டாவா இருக்கு..!

0 3299

சென்னை ஈஞ்சம் பாக்கத்தில் உள்ள நடிகர் அஜீத்குமார் வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண் ஒருவரை தடுத்து காப்பாற்றிய போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரித்து வருகின்றனர். வேலையிழந்த பெண்ணுக்கு உதவ போனதால் அஜீத் உபத்திரத்தில் சிக்கிய பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..  

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்தவர் பர்சானா. இவர் தனது தாயுடன் ஈஞ்சம் பாக்கத்தில் உள்ள நடிகர் அஜீத் வீட்டிற்கு முன்பாக தீக்குளிக்க போவதாக கூறி செய்தியாளர்களுக்கு அழைப்பு விடுத்தார். செய்தியாளர் மூலம் தகவல் அறிந்து சம்பவ இடத்தில் போலீசாரும் தயாராக காத்திருந்தனர்.

தாயுடன் அங்கு சென்ற பர்சானா, அஜீத்தால் தனக்கு வேலை போய்விட்டது என்றும், அஜீத் மேலாளர் சுரேஷ் சந்திரா தன் மீது அவதூறு பரப்பும் விதமாக வீடியோ வெளியிட்டு வருவதாகவும், கூறி அஜீத் நேரில் சந்திக்கவில்லை என்றால் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்றும் போலீசாரிடம் ஆவேசம் காட்டினார் .

பின்னர் தான் கையோடு கொண்டு வந்திருந்த மண்ணெண்ணையை ஊற்றிக் கொள்ள முயன்ற போது, போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து அவரது கையில் இருந்து அந்த பாட்டிலை பறித்தனர். அந்தப்பெண்ணின் தலையில் தண்ணீரை ஊற்றி, அவரையும் அவரது தாயையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அனுப்பிவைத்தனர்.

கடந்த ஆண்டு மே மாதம் நடிகர் அஜீத் தனது மனைவியுடன் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்ற போது அங்கு ஒருங்கிணைப்பாளர் பணியில் இருந்த பர்சானா அவர்களை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதனை அறிந்த மருத்துவமனை நிர்வாகம் பர்சானாவை பணி நீக்கம் செய்தது. அந்தப்பெண் அஜீத்தை சந்தித்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் அவரது சிபாரிசின் பேரில் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

பின்னர் சில மாதங்கள் கழித்து பர்சானாவின் பணியில் திருப்தி இல்லை என்று மீண்டும் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அஜீத்தையும் ஷாலினியையும் தொடர்பு கொண்டு சிபாரிசு செய்ய சொல்லி உதவி கேட்டுள்ளார் பர்சானா. சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் உள்விவகாரங்களில் தலையிட அவர்கள் மறுத்துவிட்ட நிலையில், மகளின் கல்விக்கு உதவி கேட்டு கெஞ்சியுள்ளார் பர்சானா. அஜீத் தரப்பில் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு காசோலை வழங்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், தனது பெயருக்கு காசோலை அல்லது ரொக்கமாக தரவேண்டும் என்று பர்சானா நிபந்தனை விதித்ததால் அவர்கள் உதவவில்லை என்று கூறப்படுகின்றது.

அதன் தொடர்ச்சியாக அஜீத்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மீது உதவுவதாக கூறி தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்தார். அந்த புகாரை விசாரித்த போலீசார் உதவி செய்வது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்று கூறி புகாரை தள்ளுபடி செய்தனர்.

இந்த நிலையில் அஜீத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கில் அந்த பெண் இந்த தீக்குளிப்பு நாடகத்தில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவி செய்யபோய் வீணாக அஜீத் உபத்திரத்தில் சிக்கி இருப்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments