7 மணி நேரமாக முடங்கிய ஃபேஸ்புக் கோடிக்கணக்கான பயனர்கள் அவதி

0 3554

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கிய பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் 7 மணி நேரத்திற்குப்பின் செயல்படத் தொடங்கியது. சமூக வலைதளங்களின் முடக்கத்தால் கோடிக்கணக்கான பயனாளர்கள் அவதிக்காளாகினர்.

இந்திய நேரப்படி நேற்று இரவு 9 மணி முதல் வாட்ஸ் அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றின் சேவை முடங்கியது. முதலில் தங்களின் இணையத் தொடர்பில் பிரச்சனை இருப்பதாக கருதிய பயனர்கள், சில மணி நேரத்துக்கு பின்பே சேவை முடங்கியதை அறிந்தனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக சேவை முடங்கியதாகவும், சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் விரைவில் சேவை மீண்டும் கிடைக்கும் என்று ஃபேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை 4 மணியளவில் அவற்றின் சேவை மெல்லமெல்ல சரி செய்யப்பட்டு இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது.

இந்த நிலையில் ஃபேஸ்புக் நிறுவனம் தனது பயனாளர்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளது. வாட்ஸ்அப் இயங்கத் தொடங்கியிருப்பதாகவும், பொறுமை காத்ததற்கு நன்றி தெரிவிப்பதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மற்றும் மெசஞ்சர் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துவிட்டதாக ஃபேஸ்புக் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இடையூறுக்கு மன்னிப்புக் கோருவதாகவும் தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குமுன் 2019ம் ஆண்டில் பேஸ்புக் சேவை முடங்கிய போதும், ஒரு மணி நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது. தற்போது, 7 மணி நேரத்துக்கும் மேலாக பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ,பேஸ்புக் மெசெஞ்சர் ஆகியவற்றின் சேவை முடங்கியதால் உலகம் முழுவதும் பல கோடி பேர் அவதிக்குள்ளாகினர்.

ஃபேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் உலகம் முழுவதும் முடங்கியதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் ட்விட்டருக்கு படையெடுத்தனர். முக்கியமான சமூக வலைதளங்கள் முடங்கியதால் கோடிக்கணக்கான மக்கள் தகவல்களைப் பரிமாற முடியாமல் பெரும் தவிப்புக்கு ஆளாகினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments