கோடாரி எடுத்து தம்பிகளை விரட்டிய அரசியல் பிரமுகர் ..! வீடியோ எடுத்து ஆப்பு வைத்தனர்..!

0 6381
கோடாரி எடுத்து தம்பிகளை விரட்டிய அரசியல் பிரமுகர் ..! வீடியோ எடுத்து ஆப்பு வைத்தனர்..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு வாக்கு கேட்டுச்சென்ற தம்பிகளை கோடாரியை எடுத்து வெட்டுவதற்கு விரட்டிய அரசியல் கட்சி தொண்டரை காவல்துறையினர் கைது செய்தனர். தம்பிகளிடம் வம்பு இழுத்ததால் கம்பி எண்ணும் ஆவேச தொண்டர் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட விண்ணமங்கலம் 12வது வார்டு பகுதியில் ஒன்றியக்குழு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் போஸ் என்பவர் தனது ஆதரவாளர்களுடன் விண்ணமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வாக்குகேட்க சென்றார்.

அப்போது அந்தபகுதியை சேர்ந்த மற்றொரு அரசியல் கட்சி தொண்டரான விஜி என்பவரின் வீட்டு அருகே சென்று ஓட்டு கேட்டுக் கொண்டிருந்த பொழுது குடிபோதையில் இருந்த விஜி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரையும் வாக்குசேகரித்த தம்பிகளையும் தடுத்து நிறுத்தி தெருவுக்குள் வரக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகின்றது.

வாக்கு சேகரிக்க வந்தவர்களை ஆபாசமாக திட்டியதோடு, ஓடிவிட எச்சரித்த போது அவரை வீடியோ எடுத்தபடி தம்பிகள் அங்கு கெத்தாக நின்றதால் அவருக்கு கூடுதலாக ஆத்திரம் ஏற்பட்டது.அருகில் பெண்கள் நிற்கிறார்கள் என்பதையும் மறந்து ஆவேசமாக அந்த தொண்டர் , வீட்டுக்குள் சென்று ஆடைகளை கலைந்து போட்டுவிட்டு , தனது சிங்கிள் பேக் உடல் தெரிய உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு அரை நிர்வாணமாக கையில் கோடாரி ஒன்றை தூக்கிக் கொண்டு வீதிக்கு வந்து ரகளையில் ஈடுபட்டார் விஜி..!

ஆனால் நாம் தமிழர் கட்சி தம்பிகளோ தைரியமாக அவரை எதிர் கொண்டு அவர் செய்யும் அட்டகாசங்களை ஆதாரத்திற்கு வீடியோ பதிவு செய்து கொண்டு இருந்தனர். ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறிய நிலையில் வாக்கு சேகரிக்க வந்தவர்களை நோக்கி வெட்டுவதற்காக பாய்ந்தார் விஜி.

இதையடுத்து அவரது கோடாரி வீச்சில் இருந்து மயிரிழையில் தப்பிய நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் போஸ், இந்த வீடியோ ஆதாரத்துடன், விஜியின் அட்டகாசம் குறித்து ஆம்பூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து விஜியை பிடித்து விசாரித்த போது அவர் திமுக கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லாத சாதாரண தொண்டர் என்பது தெரியவந்தது.

திமுகவை சேர்ந்தவராக இருந்தாலும் விஜி செய்தது அத்துமீறிய செயல் என்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்து பாரபட்சமின்றி கைது நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் அமைதியாக நின்று வீடியோ எடுத்த தம்பிகளின் சாமர்த்தியமான செயல், ஆவேச பட்ட தொண்டரை கம்பி எண்ண வைத்துள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments