உத்தரப்பிரதேசத்தில் 8 பேர் பலி.! மத்திய அமைச்சர் மகன் மீது வழக்கு... பிரியங்கா, அகிலேஷ் கைது

0 4037

உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள் மீது காரை மோதி ஏற்றிக் கொன்றதிலும், விவசாயிகள் பதிலடியாகத் திருப்பித் தாக்கியதிலும் மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க முயன்ற பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காரை ஏற்றியதாகக் குற்றம்சாட்டப்படும் விவகாரத்தில் 4 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

பலர் காயமடைந்தனர். மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் காரை ஓட்டி வந்ததாகக் கூறப்படும் நிலையில், விவசாயிகள் திருப்பித் தாக்கியபோது ஆசிஷ் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அந்தக் காரில் இருந்த பாஜகவினர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோரில் செய்தியாளரான ராமன் காஷ்யப்பும் ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆசிஷ் கார் உட்பட2 கார்களைத் தீவைத்துக் கொளுத்தினர்.

விவசாயிகள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது மகன் மீதான குற்றச்சாட்டை அமைச்சர் அஜய் மிஸ்ரா மறுத்துள்ளார்.

லக்கிம்பூரில் உயிரிழந்த விவசாயிகள் 4 பேரின் குடும்பங்களுக்கு 45 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.

காயமடைந்தோருக்குப் பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் விசாரணை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments