திருமணமான நான்கே மாதத்தில் கணவனை வெட்டிக் கொன்ற மனைவி...!

0 7415

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகே திருமணமான நான்கே மாதத்தில் தகாத உறவை தட்டிக் கேட்டதாக கூறி கணவனை அரிவாளால் வெட்டி கொலை செய்து, சடலத்தை கிணற்றில் வீசிவிட்டு 10 நாட்களாக நாடகமாடி வந்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கந்தர்வகோட்டை அருகே போரம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டிதுரைக்கும் - நந்தினிக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு முன்பு புலவன்காடு பகுதியைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்த நந்தினியை, பெற்றோர் கட்டாயப்படுத்தி பாண்டிதுரைக்கு திருமணம் செய்துவைத்ததாக சொல்லப்படுகிறது. இதனால், திருமணத்திற்கு பின்பும் தனது காதலை தொடர்ந்து வந்த நந்தினி, கணவருக்கு தெரியாமல் அந்த இளைஞரை சந்தித்து பேசி வந்ததாகவும், இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 20-ம் தேதி முதல் பாண்டிதுரை மாயமான நிலையில், பல இடங்களில் தேடிய அவரது தாயார், ஆதனக்கோட்டை போலீசில் புகாரளித்துள்ளார். போலீசாரும் வழக்குப்பதிந்து பாண்டிதுரையை தேடி வந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் மனைவி நந்தினியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் பாண்டிதுரை கொல்லப்பட்ட தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. விசாரணையில் சம்பவத்தன்று வழக்கம்போல் கணவருக்கும், தனக்கும் சண்டை நடந்ததாகவும், அப்போது கணவர் தன் கழுத்தை நெரித்ததால், ஆத்திரமடைந்து பதிலுக்கு அரிவாளால் தலையில் வெட்டியும், அடித்தும் கொலை செய்து, சடலத்தை அருகிலுள்ள உறைகிணற்றில் வீசியதாகவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

மேலும், கணவனை கொலை செய்துவிட்டு, ஒன்றுமே தெரியாதது போல் நடித்த நந்தினி, குடும்பத்தினர் அவரை தேடும் போது தானும் சேர்ந்து தேடியிருக்கிறார். இதனையடுத்து அழுகிய நிலையில் உறை கிணற்றில் கிடந்த பாண்டிதுரையின் சடலத்தை போலீசார் மீட்டனர். இதனையடுத்து, நந்தினியை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments