எல்லையில் சீனா படைக்குவிப்பு..! ராணுவத் தளபதி நரவானே தகவல்..!

0 3578
எல்லையில் சீனா படைக்குவிப்பு..! ராணுவத் தளபதி நரவானே தகவல்..!

கிழக்கு லடாக்கிலும் வடக்கு எல்லை நெடுகிலும் முகப்பில் உள்ள நிலைகளில் சீனா கணிசமான எண்ணிக்கையில் ராணுவ வீரர்களைக் குவித்துள்ளதாக ராணுவத்தின் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு இந்திய ராணுவத் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே பேட்டியளித்தார். அதில், கடந்த ஆறு மாதங்களில் எல்லையில் நிலைமை இயல்பாக இருந்ததாகவும், அண்மையில் சீனப் படையினரின் வரத்து அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். கிழக்கு லடாக் மற்றும் வடக்கு எல்லையின் முன்னிலைகள் முதல் கிழக்கு மண்டல எல்லைகள் வரையும் சீனப் படையினரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதால் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டி உள்ளதாகத் தெரிவித்தார்.

சீனப் படையினரின் அனைத்து நடவடிக்கைகளையும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், உளவுத் தகவல்களின் அடிப்படையில் அதற்கேற்றபடி நமது உட்கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த நேரத்தில் எந்தவொரு நிகழ்வையும் சந்திக்கத் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார். மோதல் மூளும் நிலையுள்ள பகுதிகளில் படைகளை விலக்குவது குறித்துப் பேச்சு நடத்துவதன்மூலம் தீர்வுகாணலாம் என்றும், இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் நிலையிலான 13ஆம் சுற்றுப் பேச்சு அடுத்த வாரம் தொடங்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே கிழக்கு லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கே9 வஜ்ரா வகை பீரங்கிகளைக் கொண்டு சென்று இந்திய ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். கொரியத் தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் எல் அண்ட் டி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இவ்வகை பீரங்கிகளால் ஐம்பது கிலோமீட்டர் தொலைவு வரையுள்ள எதிரி இலக்குகளைத் தாக்க முடியும் எனக் கூறப்படுகிறது.SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments