75 ஏக்கர் நிலம் ... 26 வாரிசுகள்.. ஒரு வேளை சோறு இல்லப்பா... கருப்பாயி பாட்டி கண்ணீர்..!

0 66942
75 ஏக்கர் நிலம் ... 26 வாரிசுகள்.. ஒரு வேளை சோறு இல்லப்பா... கருப்பாயி பாட்டி கண்ணீர்..!

7 பிள்ளைகள், 19 பேரப்பிள்ளைகள் இருந்தும் ஒரு வேளை சோற்றுக்காக 80 வயது மூதாட்டி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தவிக்க விட்ட மகனுக்கு தவறை உணரவைத்த தாய் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பசியில்லா நத்தம் அமைப்பை சேர்ந்த மதுசூதனன் என்பவர் மூதாட்டி ஒருவரை நத்தம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தார். காவல் நிலையத்தில் இருந்த உதவி காவல் ஆய்வாளரிடம் அந்த மூதாட்டி புகார் ஒன்றை அளித்தார்.

அதில் தனது பெயர் கருப்பாயி என்றும் சிறுகுடி கிராமத்தை சேர்ந்த தனக்கு 7 பிள்ளைகள் மற்றும் 19 பேரப்பிள்ளைகள் என 26 வாரிசுகள் என்றும் அனைவரையும் படிக்க வைத்ததோடு, நல்லபடியாக திருமணம் நடத்தி வைத்ததாகவும், தனது கணவர் இறந்து நிலையில் 80 வயதாகும் தனக்கு பிள்ளைகளும், பேரன் பேத்திகளும் சோறு போட மறுக்கின்றனர் என்றும், இந்த வயதில் வேலைக்கு போகும் அளவுக்கு உடலில் தெம்பு இல்லை எனவும் தனது இயலாமையை தெரிவித்திருந்த அந்த மூதாட்டி தனது பிள்ளைகளை அழைத்து ஒரு வேளை உணவு வழங்க செய்ய வேண்டும் என்று கூறியிருந்ததது காவல்துறையினரையே கலங்க வைத்தது..!

அந்த மூதாட்டியிடம் ஏன் பிள்ளைகள் மீது போலீசில் புகார் அளித்தீர்கள் என்று கேட்டதற்கு, பழைய கஞ்சியில் தண்ணீரை ஊற்றி தருகிறார்கள்... ஒரு வேளை சோறு போடமாட்டேங்குறாங்க... அதனால் வீட்டை விட்டு வந்து விட்டதாக., மிகுந்த ஆதங்கத்துடன் கண்கலங்கிய நிலையில் தெரிவித்தார்.

அந்த மூதாட்டிக்கு ஒரு மகன் மற்றும் 6 மகள்கள் என்று கூறப்படுகின்றது. மகன் கூலிவேலை செய்து வரும் நிலையில், மகள்களை நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்ததால், அவர்களது பிள்ளைகள் வெளிநாடுகளில் வசித்து வருவதாக கூறப்படுகின்றது. மூதாட்டிக்கு சொந்தமான 75 ஏக்கர் நிலத்தை அவர்களது வாரிசுகள் பகிர்ந்து கொண்டு வீட்டுவாசலில் சிறு குடிசை அமைத்து அதில் மூதாட்டியை தங்க வைத்துள்ளனர். மகனின் மனைவி உணவு கொடுக்கும் போதெல்லாம் வேண்டா வெறுப்பாக திட்டியபடியே பழைய சோற்றை தட்டில் ஊற்றி கொடுத்ததால், விரக்தி அடைந்த கருப்பாயி பாட்டி , அவமானப்பட்டு இதனை சாப்பிடுவதற்கு பதிலாக பிச்சை எடுத்தாவது சாப்பிடலாம் என்று வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது.

இதையடுத்து அவரது மகனை பிடித்து விசாரித்த போலீசார், வயதான தாய் வீட்டை விட்டு சென்ற நிலையில் அவரை தேட கூட முயற்சி எடுக்காதது ஏன்? என்று கேட்டு சத்தம் போட்டனர். மேலும் தாயாருக்கு சொந்தமான சொத்துக்கள் வேண்டும்? தாய் வேண்டாமா? எனக் கேட்டு போலீசார் தகுந்த அறிவுரைவழங்கினர். இதையடுத்து ஒழுங்காக உணவு வழங்கி வீட்டில் வைத்து அக்கறையுடன் பார்த்துக் கொள்வதாக உறுதி அளித்த அவரது மகன், தனது தாயாரை வீட்டு அழைத்துச்சென்றார்.

நாமும் அடுத்த 10 ஆண்டுகளில் மாமியாராக போகிறோம் என்று பெரும்பாலான மருமகள்களின் புத்திக்கு எட்டுவதில்லை, அதனால் தான் மாமியார் சொல்வதை எல்லாம் குற்றம் என்று கணவனிடம் மல்லுக்கு நிற்கிறார்கள் என காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். வயதான காலத்தில் மாமியார்களும், வரட்டு கவுரவத்தை விலக்கி வைத்து மருமகளை தன் மகளாக பார்த்து விட்டுக் கொடுத்து சென்றால் இத்தகைய பிரச்சனைகளுக்கு குடும்பத்தில் இடமில்லை என்கின்றனர் போலீசார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments