குப்பையில்லா நகரங்கள்...! மாசில்லாத நீர்நிலை...! தூய்மை இந்தியா 2.0 நோக்கங்கள்...!

0 1512

குப்பையில்லா நகரங்களை உருவாக்குவதே "தூய்மை இந்தியா" இரண்டாம் கட்டத் திட்டத்தின் நோக்கம் என்றும், நகரங்களில் மலைபோல் குவித்துள்ள திடக்கழிவுகளைப் பிரித்தெடுத்து அவை முழுமையாக அகற்றப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

தூய்மை இந்தியா இரண்டாவது கட்டம், அம்ருத் இரண்டாவது கட்டம் ஆகிய திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய மோடி, குப்பையில்லா நகரங்களை உருவாக்குவதே தூய்மை இந்தியா இரண்டாம் கட்டத் திட்டத்தின் நோக்கம் எனத் தெரிவித்தார்.

கழிவுநீரைச் சுத்திகரித்தல், கழிவுநீர்க் கால்வாய்கள் ஆறுகளில் கலப்பதைத் தடுத்தல் ஆகியவற்றின் மூலம் நீர்நிலைகளைக் காப்பது அம்ருத் இரண்டாம் கட்டத் திட்டத்தின் நோக்கம் எனத் தெரிவித்தார். நகர்ப்புற வளர்ச்சி சமத்துவத்துக்கு முதன்மையானது என அம்பேத்கர் கருதியதாகவும், அவரின் கனவுகளை நனவாக்கும் நடவடிக்கையாக இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இனிமேல் மிட்டாய்களின் உறைகளைத் தரையில் போடாமல் பையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், வீட்டின் சுற்றுப்புறத்தில் கழிவுகளைப் போடக்கூடாது எனப் பெரியவர்களைச் சிறார் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். கழிவுப் பொருட்களில் இருந்து சிலர் வருமானம் ஈட்டுவதாகவும், மட்கும் குப்பை, மட்காக் குப்பை எனப் பிரித்து வழங்கும்படி சிலர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

நகரங்களில் மலைபோல் குவித்துள்ள கழிவுகளைப் பிரித்தெடுத்து அகற்றுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கங்களில் ஒன்று எனத்தெரிவித்தார். 2014ஆம் ஆண்டு தூய்மைக்கான பரப்புரையைத் தொடங்கியபோது 20 விழுக்காடு கழிவுகளே வகை பிரிக்கப்பட்டதாகவும், இப்போது அது 70 விழுக்காடாக உயர்ந்து ஒரு நாளில் ஒரு லட்சம் டன் கழிவுகள் வகை பிரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார். நூறு விழுக்காடு கழிவுகளையும் வகை பிரித்து அகற்றுவதற்கான முயற்சியே தூய்மை இந்தியா இரண்டாம் கட்டத் திட்டம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments