அடியாட்களை ஏவி... மகனை கடத்திய தாய்.. புத்திரப் பாசமாம்..

0 3388

சென்னையில் வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கடத்தப்பட்ட சம்பவத்தில், பெற்ற தாயே ஆள் வைத்து மகனை கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. 7 ஆண்டுகளுக்கு முன் கைக்குழந்தையாக இருக்கும் போது மகனை பிரிந்த தாய், புத்திரபாசத்தால் கடத்தல்காரியாக மாறிய பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு....

சென்னை அடுத்த குரோம்பேட்டையைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவரது 8 வயது மகன் முகமது சித்திக், கடந்த புதன்கிழமை மாலை வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, அங்கு சில அடி தூரத்தில் நின்றிருந்த காருக்குள் அமர்ந்திருந்த சிலர் சிறுவனை அருகில் வருமாறு அழைத்துள்ளனர். சிறுவன் காருக்கு அருகே சென்றதும், அவனை காருக்குள் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர்.

சிறுவனோடு விளையாடிக் கொண்டிருந்த அவனது நண்பர்கள் அளித்த தகவலின் பேரில் தந்தை முகமது இஸ்மாயில் தனது உறவினர்களுடன் சென்று குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகாரளித்தார். மேலும் மகனை உடனடியாக மீட்க வலியுறுத்தி அவர் முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டார்.

இதனையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார், அந்த பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, 2 பேர் சிறுவனை காரில் ஏற்றிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. அந்த காரின் பதிவெண்ணை குரோம்பேட்டை போலீசார் தமிழகத்திலுள்ள அனைத்து சோதனை சாவடிகளுக்கும் அனுப்பி வைத்து உஷார்படுத்தினர்.

அதன் அடிப்படையில், சிறுவனை கடத்திச் சென்ற கார் விழுப்புரம் சுங்கச் சாவடியில் சிக்கியது. காருக்குள் பெண் ஒருவரும் இருந்தார். இதனையடுத்து, குரோம்பேட்டை போலீசார் உடனடியாக விழுப்புரம் விரைந்து விசாரணை நடத்திய நிலையில், தனது மகனை தான் அழைத்துச் செல்வதாக காரில் இருந்த பெண் கூறியுள்ளார். இதன் பிறகு சிறுவனின் தாயே ஆள் வைத்து அவனை கடத்திச் சென்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.

7 வருடங்களுக்கு முன் முகமது சித்திக் பிறந்த சில மாதங்களிலேயே தாய் சையத் அலி பாத்திமா, கருத்துவேறுபாடு காரணமாக கணவன் இஸ்மாயிலை விட்டு பிரிந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு பிறகு, மகனை தாயிடம் கொடுக்காமல் தந்தை இஸ்மாயிலே வளர்த்து வந்துள்ளார். இதனால் குழந்தையை யார் வளர்ப்பது என இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அடிக்கடி குடும்பத்தினர் மூலம் மகனை சந்திக்க வந்த சையத் அலி பாத்திமாவை இஸ்மாயில் சந்திக்க விடாமல் தடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் தான், திருநெல்வேலியில் தங்கியிருக்கும் சையத் அலி பாத்திமா, தெரிந்தவர்கள் உதவியுடன் சென்னைக்கு வந்து மகனை கார் வைத்து கடத்திச் சென்றது தெரியவந்தது. ஆனால், மனைவியே மகனை கடத்திச் சென்றது தெரிந்து, கணவன் இஸ்மாயிலும் புகாரை வாபஸ் பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments