நாமக்கலில் கொட்டித் தீர்த்தது கனமழை... வெள்ளத்தில் சிக்கிய வாகனங்கள்!

0 3472

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு பகுதிகளில் கனமழை காரணமாக, தாழ்வான பகுதிகளில் ஆறுபோல வெள்ளம் பெருக்கெடுத்தது. சாலையில் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட காரில் இருந்த குடும்பத்தினரையும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் கயிறு கட்டி மீட்டனர்

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் சுற்றுவட்டார பகுதியில் விடிய விடிய கனமழை பெய்தது. பள்ளிப்பாளையம் நான்கு வழிச்சாலை சந்திப்பு அருகே செல்லும் பிரதான கால்வாயில் அளவுக்கு அதிகமாக சென்ற மழைநீர், அருகில் இருந்த சாலைகளில் வெள்ளமாக பெருக்கெடுத்தது. அங்கிருந்த கடைகளிலும் மழைநீர் புகுந்தது.

சாலைகளில் சுமார் 3அடி உயரத்திற்கு தண்ணீர் பெருக்கெடுத்ததால், பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் கூட தத்தளித்தன. பள்ளிபாளையம் பகுதியில் நான்கு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலையில் திடீரென பெருக்கெடுத்த நீரில் கார் உள்ளிட்ட வாகனங்கள் நகரமுடியாமல் நின்றன. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். ஒரு காரில் இருந்தவர்களை கயிறு கட்டி மீட்டனர். கைக்குழந்தையையும் மீட்புப் படையினர் பத்திரமாக மேடான பகுதிக்கு கொண்டு சென்றனர்.

மழைக் காலங்களில் வெள்ளம் பெருக்கெடுப்பதை தவிர்க்க, நான்கு வழிச்சாலை சந்திப்பு பகுதியில் செல்லும் பெரிய கால்வாயை தூர்வார வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பள்ளிப்பாளையம் நகர பகுதியில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது. ஊருக்குள் ஆறுபோல மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. விளைநிலங்களிலும் தண்ணீர் சூழ்ந்ததால், மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் பாதிப்படைந்துள்ளன.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியிலும் கன மழை காரணமாக, சூரியம்பாளையம், கூட்டப்பள்ளி ஆகிய பகுதிகளில் மழைநீர் ஊருக்குள் புகுந்தது. சூரியம்பாளையம் பகுதியில், ஏரிக்குச் செல்லும் நீர்வழிப் பாதை அடைபட்டு இருந்ததால் மழை நீர் ஊருக்குள் புகுந்தது. மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்ததால், 40-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்தவர்கள் வெளியே வர முடியாத சூழல் ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் மற்றும் வருவாய்துறையினர் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் நீர் வழிப்பாதையை சரி செய்யும் பணியை மேற்கொண்டனர்.

சூரியம்பாளையம் முனியப்பன் கோவில் இரண்டாவது தெரு பகுதியில், 5 ஓட்டு வீடுகள் கன மழையால் முழுவதுமாக சேதம் அடைந்தன. இரவு நேரம் தூங்கிக் கொண்டிருந்தபோது ஓட்டு கூரைகள் சேதமடைந்த நிலையில், யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

பள்ளிப்பாளையத்தில் பள்ளமான ஓரிடத்தில் திடீர் அருவி உருவானது. இதேபோல சாலையில் ஆறு போல தண்ணீர் ஓடியதால் அதில் நின்று இளைஞர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

சரக்கு வாகனங்கள் சாலையில் ஊர்ந்து செல்கின்றனவா, நீரில் மிதந்து செல்கின்றனவா என சந்தேகிக்கும் வகையில் வெள்ளக்காட்சி இருந்தது.

இதனிடையே, நாமக்கல் மாவட்டத்தில் கனமழை, வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வடிகால் சுத்தம் செய்யும் பணிகள் 60சதவீதம் நிறைவடைந்திருப்பதாகவும்,
கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments