சிகரெட்டு திருட்டுக்கு அரபுபாணி தண்டனை.. சிறுவனுக்கு விழுந்த அடிகள்.. ஜமாத்தாரை போலீஸ் தேடுகின்றது..!

0 3178

பெட்டிக்கடையில் சிகரெட்டு திருடிய சிறுவனை ஜமாத்தை சேர்ந்த 4 பெரியவர்கள் கம்பால் அடித்து, அரபு பாணியில் கொடுத்த தண்டனை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் சிறுவனை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். 

பதின்பருவ சிறுவனை, ஒரு பெரியவர் கம்பால் தாக்கும் வீடியோ ஒன்று ராமநாதபுரம் பகுதியில் வைரலானது. அதில் அந்த சிறுவனை இரு பெரியவர்கள் சரமாரியாக தாக்கும் காட்சிகள் இருந்தது.

இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்த போது தாக்குதலுக்குள்ளான சிறுவன் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவன் என்பதும் 11 ஆம் வகுப்பு படிக்கின்ற அந்த மாணவன் அங்குள்ள அப்துல்ரகுமான் என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் உரிமையாளர் மகன் மற்றும் வேறு ஒரு சிறுவனுடன் கூட்டு சேர்ந்து சிகரெட், மிட்டாய் உள்ளிட்டவற்றை திருடியதாக கூறப்படுகிறது. அது குறித்து கடைக்காரர் அப்துல்ரகுமான் ஜமாத்தாரிடம் புகார் அளித்ததன் பேரில், ஜமாத்தை சேர்ந்த 4 பெரியவர்கள், அந்த இரு சிறுவர்களையும் அழைத்து விசாரித்தபோது பொது இடத்தில் வைத்து கம்பால் தாக்கியது தெரியவந்தது.

ஜமாத்தை சேர்ந்த மற்றொருவர் தாக்கியதில் சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், மன நிலை பாதிப்புக்குள்ளான நிலையில் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் தாய் அளித்த புகாரின் பேரில் ஜமாத்தில் உள்ள முத்து முகமது, முஜாபர், அமீர்,செய்யது அபுதாகீர் ஆகிய 4 பேர் மீது காவல்துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து ஊரைக்கூட்டி சிறுவனை தாக்கிய ஜமாத்தார் 4 பேரும் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகின்றது. அவர்களை போலீசார் தேடிவருகின்றனர். இந்த திருட்டில் 3 சிறுவர்கள் சம்பந்தப்பட்ட நிலையில் இல்லாத வீட்டு பிள்ளை என்பதால் தனது மகனை தாக்கி காயப்படுத்தியதாக சிறுவனின் தாய் வேதனை தெரிவித்தார்.

சிறுவர்கள் புகைப்பழக்கத்தை நாடுவது தவறானது என அவர்களுக்கு அதன் தீமைகளை எடுத்துச் சொல்லி திருத்த வேண்டுமே தவிர, சிறுவர்களை பொதுவெளியில் வைத்து அரபு தேசத்தில் சவுக்கால் அடிப்பது போன்று சரமாரியாக கம்பால் தாக்குவது மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments