தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை..! லட்சக்கணக்கான ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல்..!

0 2241
லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை..! கணக்கில் வராத பணம் பறிமுதல்..!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், சார்பதிவாளர் அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய அதிரடி ஆய்வில் லட்சக் கணக்கான ரூபாய் கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவையும் தாண்டி நீடித்தது

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மாதக் கடைசி நாளில் பெருமளவு லஞ்சப் பணம் கைமாறுவதாக தகவல் வந்ததையடுத்து அனைத்து அலுவலர்கள், தரகர்களை வெளியே விடாமல் கதவைப் பூட்டி உள்ளே லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

சிதம்பரம் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தியதில், அலுவலகக் கண்காணிப்பாளர் சக்திவேல், உதவியாளர் சந்திரசேகர் ஆகியோரிடம் கணக்கில் வராத பணம் ஐம்பதாயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பெண்ணாடம் சார்பதிவாளர் அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் போக்குவரத்துத் துறைச் சோதனைச் சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் இரண்டரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் சீனிவாசனிடம் விசாரணை நடத்தினர்.

நாகப்பட்டினம் ஊரக வளர்ச்சித் துறைச் செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில் 70 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

சிவகங்கை ஊரக வளர்ச்சித்துறைப் பொறியியல் பிரிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர்.

திருச்சி மாவட்டம் முசிறி சார்பதிவாளர் அலுவலகத்தில் இடைத்தரகர்கள் மூலம் லஞ்சப் பணம் கைமாறுவதாகத் தகவல் கிடைத்ததையடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர்.

ஈரோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வாகனப் பதிவுக்கு வரும் பொது மக்களிடம் லஞ்சம் வாங்குவதாகப் புகார் வந்ததால் அங்கு லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில் ஒரு லட்சத்து 58 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் பிடிபட்டது. நிலபுரோக்கர்கள், ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

ஈரோடு வட்டாரப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் 8 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்றது. இதில், கணக்கில் வராத ஒரு லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவாரூர் விளமலில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஊழியர்கள், புரோக்கர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கணக்கில் வராத 25 ஆயிரத்து 800 ரூபாயை அவர்கள் கைப்பற்றினர்.

திருப்பூர் மின்வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியதுடன், புதிய மின் இணைப்புகளுக்கு விண்ணப்பித்தவர்கள் விவரங்களை கேட்டறிந்தனர். அங்கு 36 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத 27 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments