சிவக்குமாரின் சம்பவம்..! கட்சி பேதமின்றி கைவரிசை

0 2947
சிவக்குமாரின் சம்பவம்..! கட்சி பேதமின்றி கைவரிசை

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த் உள்ளிட்ட அரசியல் கட்சியினரிடம், தனது குழந்தை மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த பழைய புகைப்படத்தை பயன்படுத்தி, அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக ஏமாற்றி, நூதன முறையில் பணம் பறித்த ஆசாமியை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆளும் கட்சி நிர்வாகிகள், எதிர்க்கட்சி பிரமுகர்கள் என கட்சிப் பாகுபாடு இல்லாமல் பலரிடமும், 'நான் உங்கள் கட்சியைச் சேர்ந்தவன்' எனக் கூறி தனது குழந்தை சிகிச்சை பெறும் பழைய படத்தை வைத்து வசூல் சம்பவம் செய்த சிவகுமார் இவர்தான்...!

 

தூத்துக்குடியைச் சேர்ந்த திமுக நிர்வாகியான வழக்கறிஞர் ஜோயல் என்பவரின் செல்போன் வாட்ஸ் அப்-பில் வந்த, புகைப்படத்தில், பச்சிளம் குழந்தை மருத்துவமனையில் இன்குபேட்டரில் அனுமதிக்கப்பட்டு இருப்பதுபோன்றும், அதனுடன் மருத்துவ சிகிச்சை விவரங்களும் இருந்துள்ளது. இதை அனுப்பி தொடர்பு கொண்ட நபர் தனது குழந்தை ஏழு மாதத்தில் பிறந்து உள்ளதாகவும், இன்குபேட்டரில் உள்ள தனது குழந்தைக்கு இருக்கும் பிரச்சனைக்கு தினமும் 15 ஆயிரம் ரூபாய் செலவில் ஊசி செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நீங்கள் அனுப்பும் 15,000 ரூபாய், ஒருநாள் தனது குழந்தையின் உயிரைக் காக்கும் என்று குறுஞ்செய்தியை பார்த்து இரக்கப்பட்ட ஜோயல் 15 ஆயிரம் ரூபாய் அந்த நபரின் கூகுள் பே எண்ணிற்கு அனுப்பி உள்ளார். சில நாட்கள் கழித்து அதே குறுஞ்செய்தி சமூக வலைதளங்களில் பரவி, அவரிடமே மீண்டும் இந்த குறுஞ்செய்தி வந்ததைப் பார்த்து அந்த எண்ணில் விசாரித்தபோது அந்த நபர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக சென்னை சைபர் கிரைம் பிரிவில் இதுகுறித்து ஜோயல் சார்பில் ஜூனியர் வழக்கறிஞர் விஜயகுமார் புகார் அளித்தார். அதன்படி விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீசார், குழந்தையின் புகைப்படத்தைக் காண்பித்து அவசர சிகிச்சைக்கு என பணம் வாங்கிய அந்த நபர் புதுச்சேரியைச் சேர்ந்த சிவகுமார் என்கிற ஜேக்கப் என்பதை கண்டறிந்தனர். அவரை பிடித்து விசாரித்தபோது சிவக்குமாரின் பாரபட்சமற்ற சீட்டிங் சம்பவங்கள் வெளிச்சத்திற்கு வந்தது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட சிவகுமாருக்கு, தற்போது ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. அந்த குழந்தை 7 மாதத்தில் பிறந்து இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், மருத்துவக் குறிப்புகளையும் வைத்துக்கொண்டு அதை பலருக்கும் வாட்ஸ் அப்பில் அனுப்பி அந்த அனுதாபத்தின் மூலம் பணம் பறிக்க தொடங்கியுள்ளார்.

அதன்படி பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை செல்போனுக்கு இந்த தகவலை அனுப்ப, அவர் கூகுள் பே மூலம் 17 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியது தெரியவந்தது. அதே போல் கன்னியாகுமரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்திடம் மருத்துவ உதவி தேவை என பணம் வாங்கியுள்ளார்.

இதேபோன்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் செல்போனுக்கு அனுப்பிய போது இதைப் பார்த்து பரிதாபப்பட்ட அவர் தனது சமூக வலைத்தள கணக்கில் பகிர்ந்ததாக கூறப்படுகிறது. அதன்படி நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பல பிரமுகர்கள் இவரது செல்போனுக்கு கூகுல் பே மூலம் 10 ஆயிரம், 15 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் வரை அடுத்தடுத்து பணம் அனுப்பி உள்ளனர்.

இதுபோன்று, கட்சிப் பாகுபாடின்றி அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 28 பேரிடம் சுமார் 2 லட்சம் ரூபாய்க்கும் மேல் வசூல் சம்பவம் செய்த சிவக்குமார் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். ஊதாரியாக சுற்றிய சிவகுமாருக்கு 41 வயதில்தான் விழுப்புரத்தில் உள்ள ஒரு சர்ச் ஒன்றுக்கு சென்று வந்தபோது ஜேக்கப் என்று பெயர் மாற்றி அதே சர்ச்சுக்கு வந்து சென்ற 37 வயது பெண்ணை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இந்த மோசடியில் கிடைத்த மொத்த பணத்தில், ஒரு ரூபாயைக் கூட சிவகுமார் தனது குழந்தைக்கோ, குடும்பத்திற்கோ உதவாமல் ஆன்லைன் ரம்மி விளையாடி அத்தனையும் இழந்திருக்கிறார் என்கின்றனர் காவல்துறையினர்.

இதுபோன்ற நன்கொடை மோசடி செயல்களால் உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களுக்கு கூட உதவ முன் வருபவர்கள் சற்று தயங்குவார்கள் எனச் சுட்டிக்காட்டும் காவல்துறையினர், சமூக வலைதளங்கள் மூலமாக இவ்வாறு அணுகி உதவி கோரினால் அதன் நம்பக தன்மை குறித்து விசாரித்த உறுதிப்படுத்திய பின்னரே உதவ வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments