சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நாத்தனார் வீட்டில் கைவரிசை காட்டிய பெண் கைது

0 3821
சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு நாத்தனார் வீட்டில் கைவரிசை காட்டிய பெண் கைது

கன்னியாகுமரியில் கணவருக்கு தெரியாமல் சினிமா பாணியில் திட்டம் போட்டு சொந்த நாத்தனார் வீட்டிலேயே 50 சவரன் நகைகளை கொள்ளையடித்ததாக கூறப்படும் பெண், காதலனுடன் போலீசில் சிக்கியிருக்கிறார். 

கன்னியாகுமரி மாவட்டம் சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பேபிசுதா, நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்க்கிறார். கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால், பேபிசுதா தனது இரு மகள்களுடன் தனியாக வசித்தார். கடந்த ஜனவரி மாதம் 26-ம் தேதி பெத்தேல்புரத்தில் வசித்து வரும் பேபிசுதாவின் தம்பி சுதர் என்பவரின் மனைவி ஷர்மிளிமோள் என்பவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு பேபி சுதாவை தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்துள்ளார்.

பேபி சுதாவும் தன் மகள்களுடன் விருந்துக்கு சென்று சிறப்பித்துள்ளார். தொடர்ந்து, ஜனவரி 28-ம் தேதி பேபிசுதா சேரமங்கலத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய போது, வீட்டின் பின்பக்க கதவுகள் மற்றும் அறை கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 50-சவரன் தங்க நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது. தொடர்ந்து, மண்டைக்காடு காவல் நிலையத்தில் புகாரளித்தார் .

கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். கடந்த 7-மாதங்களாக தனிப்படை போலீசாருக்கு கொள்ளை குறித்து எந்த தடயமும் கிடைக்கவில்லை. கொள்ளை நடந்த தினத்தில் அந்த பகுதியில் கிடைத்த செல்போன் சிக்னல்களை ஆராய்ந்த போது, பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரின் செல்போன் எண்ணும் கிடைத்துள்ளது. அந்த வாலிபர் பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரிடம் அடிக்கடி பேசி கொண்டிருந்ததையும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பெத்தேல்புரம் சென்ற தனிப்படை போலீசார் இன்று காலை அந்த வாலிபரையும் அவருடன் இருந்த இளம்பெண் ஒருவரையும் கைது செய்து மண்டைக்காடு காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கைதான வாலிபர் பெத்தேல்புரம் பகுதியை சேர்ந்த 27-வயதான ஏரோநாட்டிக்கல் என்ஜீனியரான பபின் என்பதும் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வந்த அவர் கொரோனா நோய் தொற்றால் வேலையிழந்து சொந்த ஊருக்கு திரும்பியது தெரிய வந்தது. அவருடன் கைதானவர் அதே பகுதியை சேர்ந்த ஷர்மிளி மோள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பிய பபினுடன் பக்கத்து வீட்டில் வசித்த ஷர்மிளி மோளுடன் பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட இந்த ஜோடி, தனது கணவரின் சகோதரியான பேபி சுதா, நல்ல வசதியுடன் வாழ்ந்து வருவதால், அவரின் வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளனர். திட்டப்படி பேபி சுதாவை ஷர்மிளி மோள், தன் வீட்டுக்கு விருந்துக்கு அழைத்துள்ளார். இந்த சமயத்தில் பேபி சுதாவின் வீட்டுக்கு சென்ற ஆஸ்திரேலிய ரிட்டன் இன்ஜீனியரான பபின் 50 பவுன் நகைகளை கொள்ளையடித்திருக்கிறார்.

தொடர்ந்து, ஷர்மிளி மோள் தனது கணவரிடம் வேலைக்காக நேர்முக தேர்வுக்காக சென்னை செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். இருவரும் நகைகளை விற்று ஊட்டியில் சொகுசு வீடு வாடகைக்கு எடுத்து உல்லாசமாக பல நாட்கள் இருந்துள்ளனர். நகைகளை விற்ற பணத்தில் தனது நிலத்தில் பபின், தான் கட்டிக் கொண்டிருந்த வீட்டை கட்டி முடித்து கிரக பிரவேசமும் செய்துள்ளார். இந்த வீட்டிலேயே கணவன் மனைவி போல வாழ்ந்து வந்த நிலையில்தான், செல்போன் சிக்னல் மூலம் இருவரும் பிடிபட்டுள்ளனர்.

திருடப்பட்ட 50 பவுன் நகைகளையும் அவர்கள் விற்ற இடத்தில் இருந்து போலீசார் மீட்டனர். கைதான ஜோடியை இரணியல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். திருடிய பணத்தில் ஊட்டிக்கு சென்று உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்ததோடு, சொந்தமாக வீடும் கட்டிய ஜோடிக் கிளிகள், சிறையில் அடைபட்டும் கிடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments