நட்சத்திர ஏரிக்குள் டார்ட்டாய்ஸ் தங்கபாண்டி.. தட்டி தூக்கியது போலீஸ்..!

0 30130

குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சடலம் போல மிதந்த ஆசாமியை 1 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் விரட்டி அடித்து கரைசேர்த்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொடைக்கானல் நகர காவல்துறையினருக்கு அங்குள்ள நட்சத்திர ஏரியில் ராட்சத ஆமை போன்ற சடலம் ஒன்று மிதப்பதாக காலை 11 மணிக்கு தகவல் வந்தது. உடனடியாக போலீசார் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்து விட்டு சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

தூரத்தில் இருந்து பார்த்த போது அந்த சடலம் போன்ற உருவம் கண்ணில் பட்டாலும் காமிரா உதவியுடன் சூம் செய்து பார்த்த போது அது சடலம் அல்ல என்பதும், உயிரோடு ஒருவர் மல்லாக்க படுத்து மிதப்பதும் தெரியவந்தது.

போலீசாரும், பொதுமக்களும் கரையில் இருந்து சத்தம்போட்டு அழைத்த போதும், ஜென் மன நிலையில் அந்த ஆசாமியோ கை, கால்களை நீட்டி, கண்களை மூடியபடி 19 டிகிரி குளிர் நிலையில் மரக்கட்டை போல மிதந்து கொண்டிருந்தான்.

கரையில் இருந்து நீண்ட நேரம் அழைத்து பார்த்து நொந்து போன தீயணைப்பு வீரர்கள், இரு படகுகளில் சென்று நட்சத்திர ஏரிக்குள் ஆமை போல மிதந்த ஆசாமியை மீட்க களமிறங்கினர். அந்த குளிரிலும் அவர்களை நீச்சல் போட்டிக்கு அழைப்பது போல பார்த்தார் அந்த ஸ்விம்மிங் சக்கரவர்த்தி..!

அவர்கள் எச்சரித்தும் குடி போதையில் இருந்த அந்த ஆசாமியோ, கரையேற மறுத்து அடம் பிடித்ததால் அவரை மீட்க சென்றவர்கள் அவரை விரட்ட தொடங்கினர்.

ஒரு வழியாக கரையை நோக்கி நகர்ந்த அந்த நீச்சல் புயல், கரைக்கு அருகில் வந்தாலும் தண்ணீருக்குள் நின்று கொண்டு கரையை கடக்க மறுத்தது. படகில் இருந்த இரு மரக்கட்டையை எடுத்து முதுகில் ஒரு தட்டு தட்டியதும், ஆட்டோ மேட்டிக்கா ஆசாமி அழுது கொண்டே கரையேறினார்.

போதையில் இருந்தாலும்.... அழைத்து வரவில்லை, இழுத்து வந்திருக்கிறார்கள்..! என்பது போல கம்பீரம் குறையாமல் நின்ற அவர் திருச்சியை சேர்ந்த தங்கப்பாண்டி என்பதும் சுற்றுலாபயணிகள் படகுசவாரி செல்லும் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்ட நட்சத்திர ஏரியில் குதித்து நீச்சலில் தவம் செய்ததும் தெரியவந்தது.

கடலிலும், ஏரியிலும் மணிக்கணக்கில் நீச்சல் அடிப்பேன் என்று தனது கடந்த கால கடப்பா நீச்சல் வரலாற்றை போலீசாரிடம் விளக்கிச் சொன்ன தங்க பாண்டி, களவாடினேனா, கொள்ளையடிச்சேனா.. நீச்சல் தானே அடிச்சேன் எதற்காக அடித்தார்கள் என மெல்ல உரிமைக்குரல் எழுப்பினார்

போதையில் இருந்த தங்கப்பாண்டியை தட்டியதோடு தகுந்த அறிவுரை சொல்லி போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்..! நீச்சல் அடிக்கலாம் தப்பில்லை. போதையில் விபரீதமான முறையில் கூவத்திலும் குளத்திலும் குதித்தால் அசம்பாவிதம் நிகழும் என்று எச்சரிக்கின்றனர் போலீசார்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments