வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த குலாப் புயல் கரையைக் கடந்தது

0 2088

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த குலாப் புயல் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு இடையே கரையைக் கடந்தது. 

மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வு சனிக்கிழமை மாலை வலுவடைந்து புயலாக மாறியது. குலாப் எனப் பெயரிடப்பட்ட இந்தப் புயல், வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்தது. இந்த நிலையில் குலாப் புயல் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா இடையே நேற்று இரவு கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 75 கிலோமீட்டர் முதல் 85 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது.

புயல் காரணமாக ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் உயிரிழந்தனர். ஒடிசாவில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கடலில் மாயமானதாகக் கூறப்படுகிறது. விசாகப்பட்டினம், விஜயநகரம் மற்றும் ஸ்ரீகாகுளம் ஆகிய மூன்று வட கடலோர மாவட்டங்கள் குலாப் புயலின் தாக்கத்தால் கனமழை பெய்து வருகிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும், மீட்புப் பணிகளுக்காகவும் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், மாநில பேரிடர் மீட்புப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஜெகன் மோகன், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோரை தொடர்புகொண்ட பிரதமர் மோடி அங்குள்ள நிலைமை குறித்துக் கேட்டறிந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments