ஆறுகளை காக்க திருவிழா.. பிரதமர் மோடி வலியுறுத்தல்.. நாகநதியை மேற்கோள் காட்டி உரை..!

0 2630

உலக ஆறுகள் நாளையொட்டி மனத்தின் குரல் என்னும் பெயரில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஆறுகளைத் தூய்மையாக வைத்திருப்பதுடன் ஆண்டுக்கு ஒரு முறையாவது ஆற்றுத் திருவிழா கொண்டாட வேண்டும் எனப் பொதுமக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆண்டுதோறும் செப்டம்பர் நான்காவது ஞாயிறன்று உலக ஆறுகள் நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மனத்தின் குரல் என்னும் பெயரில் வானொலியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நமக்குத் தண்ணீரைத் தரும் ஆறுகளை நினைவுகூர வேண்டிய நாள் இது எனத் தெரிவித்தார்.

ஆறுகளை வெறும் பொருளாகப் பார்க்கக் கூடாது என்றும், உயிருள்ள அமைப்பாகக் கருதி ஆண்டுக்கு ஒரு முறையாவது ஆற்றுத் திருவிழா கொண்டாட வேண்டும் என நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

தனக்குக் கிடைத்த பரிசுப் பொருட்களை இணைய வழியில் ஏலம் விட்டு அதன்மூலம் கிடைக்கும் தொகையைக் கங்கையாற்றைத் தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கு வழங்கப் போவதாகவும் தெரிவித்தார். 

தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள நாகநதி வறண்டுபோன நிலையில், ஊரகப் பெண்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் நீர்ச் சேமிப்புக் கலன்கள், தடுப்பணைகள் ஆகியவற்றைக் கட்டி அதற்குப் புத்துயிரூட்டியதையும், இப்போது அதில் நிறையத் தண்ணீர் உள்ளதையும் மேற்கோள் காட்டினார்.

குஜராத்திலும், ராஜஸ்தானிலும் தண்ணீர்ப் பற்றாக்குறையால் வறட்சி நிலவுவதைக் குறிப்பிட்டார். குஜராத்தில் மழைக்காலத் தொடக்கத்தில் மழைநீரைச் சேமிப்பதற்கான ஒரு விழாவை மக்கள் கொண்டாடி வருவதாகத் தெரிவித்தார். 

அக்டோபர் இரண்டாம் நாளில் மகாத்மா காந்தி பிறந்த நாள் வருவதன் அடையாளமாகக் காதி பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். நமது இலக்கியங்களிலும் நீதி நூல்களிலும் ஆறுகளை மாசுபடுத்துவது தவறு எனக் குறிப்பிட்டுள்ளதை நினைவுகூர்ந்தார். காந்தி தூய்மையை ஆதரித்தவர் என்றும், துப்புரவுப் பணியை மக்கள் இயக்கமாக நடத்தியதுடன், அதை விடுதலையுடன் ஒருங்கிணைத்ததாகவும் தெரிவித்தார்.

பீகார் உட்படக் கிழக்கு மாநிலங்களில் சாத் பூசை வருவதையொட்டி ஆற்றங்கரைகளைத் தூய்மை செய்வது, படித்துறைகளைச் சீரமைப்பது ஆகிய பணிகளைச் செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அனைவரின் ஒத்துழைப்பாலும், கூட்டு முயற்சியாலும் நமது ஆறுகளை மாசில்லாததாக மாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

விழாக்காலங்கள் நெருங்கும் நிலையில், கொரோனாவுக்கு எதிரான நமது போராட்டமும் தொடர்வதாகவும், தடுப்பூசி போடுவதில் ஒவ்வொரு நாளும் புதிய சாதனை படைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் தடுப்பூசியை அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments