அரசியல் பிரமுகருக்காக தலைவெட்டி கொலை..! திண்டுக்கல் திகில்

0 4283
அரசியல் பிரமுகருக்காக தலைவெட்டி கொலை..! திண்டுக்கல் திகில்

திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டை அருகே இளைஞர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய ரவுடி போலீசிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து குதித்ததால் கால் முறிந்து மாவுக்கட்டு போடும் நிலை ஏற்பட்டது. அரசியல் பிரமுகருக்காக  நடந்ததாக கூறப்படும் கொலை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன்கோட்டையைச் சேர்ந்தவர் ஸ்டீபன். 35 வயதான இவர், கடந்த 22 ம் தேதி இரவு தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பாக தாலுகா போலீசார் வழக்கு பதிந்த நிலையில், எஸ்.பி., ஸ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தினர். திண்டுக்கல் சிந்தலகுண்டு அடுத்துள்ள சாமியார்பட்டி மன்மதன், மருதீஸ்வரன் தேனியை சேர்ந்த மணிகண்டராஜன் உத்தமபாளையத்தைச் சேர்ந்த ராம்குமார் அய்யங்கோட்டையைச் சேர்ந்த சங்கரபாண்டி மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட 6 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர்.

அவர்களில் மன்மதன் மட்டும் போலீசிடம் இருந்து தப்பிப்பதற்காக பாலத்தில் இருந்து குதித்துள்ளான். இதில் விழுந்த வேகத்தில் மன்மதனின் காலில் முறிவு ஏற்பட்டது. மன்மதனை மீட்டு மனிதாபிமானத்துடன் போலீசார் மாவுக்கட்டு போட்டுவிட்டனர்.

இந்த கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போலி மதுபானம் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டதாக அண்மையில் கைது செய்யப்பட தி.மு.க., பிரமுகர் இன்பராஜ் என்பவரை போலீசில் காட்டிக் கொடுத்ததற்காக ஸ்டீபன் கொல்லப்பட்டது தெரியவந்தது.

ஆரம்பத்தில் இன்பராஜின் கூட்டாளியாக செயல்பட்டு வந்த ஸ்டீபன், போலி மது விற்பனையில் முறைகேடு செய்ததால், இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஸ்டீபனை வெளியேற்றிவிட்டு இன்பராஜ் தனது ஆதரவாளர்களான மன்மதன், சக்திவேல் உள்ளிட்டோரை வைத்து போலி மது தயாரிப்பை ரகசியமாக நடத்தி வந்துள்ளார்.

கடந்த 22 ம் தேதி காலையில், போலீசார் இன்பராஜ்க்கு சொந்தமான தோட்டத்தில் திடீர் சோதனை மேற்கொண்டு, 11 ஆயிரம் போலி மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இன்பராஜ் உள்ளிட்டோரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஸ்டீபன் தான் போலீசுக்கு துப்பு கொடுத்தது என தகவல் கிடைத்ததால் அன்று மாலையே ஸ்டீபனை மது அருந்த அழைத்துச் சென்ற இன்பராஜின் ஆதரவாளர்களான மன்மதன் தலைமையிலான கும்பல் ஸ்டீபனுக்கு போதையேற்றிவிட்டு சரமாரியாக வெட்டி, தலையை மட்டும் துண்டித்து அனுமந்தராயன் கோட்டை பஸ் ஸ்டாப்பில் நடுரோட்டில் போட்டுவிட்டுச் சென்றதாக வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் ஒருவன் தலைமறைவாக உள்ளதால் அவனை போலீசார் தேடி வருகின்றனர். வாணியம்பாடியில் கஞ்சா விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்த வசிம் அக்ரம் கொல்லப்பட்டார். அதே போல போலி மது விற்பனை குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்ததால் ஸ்டீபன் கூலிப்படையால் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments