ஜோடி போட்டு ஸ்மியூல் பாட்டு பாடி சூடு பட்ட குயில்கள்... சாட்டிங்கிலிலும் சீட்டிங்.!

0 4977

ஸ்மியூல் செயலியில் ஜோடி பாட்டு பாடுவதாக கூட்டு சேர்ந்த பெண்களை காதல் வலையில் வீழ்த்தி நகை பணம் பறித்த கேடி பாடகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜோடி போட்டு பாட்டு பாடி சூடுபட்ட குயில்களின் பரிதாபம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

திரைப்பட பாடகர்கள் போன்ற குரல் வளம் இருப்பதாக கருதி சினிமா பாடல்களுக்கு குளியலறையில் கீதம் இசைத்தவர்களை, பாடகர்களாக ஸ்மியூல் செயலி உலகிற்கு அடையாளம் காட்டி வருகின்றது.

அந்தவகையில் தனிப்பாடல், காதல் பாடல், ஜோடிப்பாடல் என பல்வேறு பாடகர்கள் ஸ்மியூல் செயலியில் சங்கீத சாம்ராஜ்யம் நடத்திவரும் நிலையில் இதில் திறமை காட்டும் சில திருமணமான மற்றும் இளம் பெண்களுடன் ஜோடிப்பாடல் பாடி, அவர்களை காதல்வலையில் வீழ்த்தி, லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகை பறித்த கேடி பாடகன் போலீசில் சிக்கியுள்ளான்.

சென்னை பெரு நகர காவல்துறையின் சைபர் குற்றபிரியில் கல்லூரி மாணவி ஒருவர் அண்மையில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தனக்கு ஸ்மியூல் ஆப்பில் பாட்டுப்பாடும் பழக்கம் இருந்ததாகவும், அதில் ஜோடி பாட்டு பாடுவதற்கு அறிமுகமான நிசாந்த் என்ற நபர் தன்னுடன் ஏராளமான டூயட் பாடல்கள் பாடியதாகவும் , அந்த பழக்கத்தை வைத்து முக நூலில் நட்பை ஏற்படுத்திக் கொண்டு வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்ததாகவும், பின்னர் இரவு நேரங்களில் அவருடன் மனம் விட்டு பேசிய சாட்டிங் பதிவுகளை ஸ்க்ரீன் சாட் எடுத்து வைத்துக் கொண்டு அதனை பகிரங்கப்படுத்தி விடுவேன் என்று மிரட்டி கொஞ்சம் கொஞ்சமாக 13.5சவரன் நகை மற்றும் 17 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பெற்றுக் கொண்டு மேலும் பணம் கேட்டு மிரட்டிவருவதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து அவர் கொடுத்த முக நூல் ஐ.டி மற்றும் வாட்ஸ் அப் எண் மூலம் விசாரித்த காவல்துறையினர் அந்த மாணவியிடம் பழகி பிளாக் மெயில் செய்து ஏமாற்றியவன், திருமுல்லை வாயலை சேர்ந்த லோகேஷ் என்பதும் அவன் நிசாந்த் என்று பெயரை மாற்றி அந்த பெண்ணிடம் மோசடியில் ஈடுபட்ட தையும் கண்டுபிடித்தனர்.

அவனிடம் நடத்திய விசாரணையில் இதே போல மலேசியாவை சேர்ந்த பெண் ஒருவர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திருமணமான பெண்களிடமும் ஸ்மியூல் ஆப் மூலம் பழகி முக நூல் மற்றும் வாட்ஸ் அப் சாட்டிங்கில் ஈடுபட்டு அவர்களிடம் ஆசையை தூண்டும் விதமாக சாட்டிங் செய்து ரகசிய காதலில் விழுந்தவர்களின் சாட்டிங்கை ஸ்க்ரீன் சாட் எடுத்து வைத்துக் கொண்டு, கணவரிடம் சொல்லி விடுவேன் என்று மிரட்டி தனது பிளாக் மெயில் வித்தை மூலம் லட்சக்கணக்கில் நகைப்பணம் பறித்தது அம்பலமானது.

அந்த பெண்களிடம் தனது பெயரை விமலேஷ் என்று கூறி ஏமாற்றியுள்ளான் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் அவமானத்துக்கு பயந்து புகார் அளிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர் காவல்துறையினர்.

வீட்டுக்குள்ளே அடைப்பட்டு கிடப்பதால் மனம் விட்டு பாடி மன அழுத்தத்தை குறைப்பதாக எண்ணி ஸ்மியூல் அப்பில் திறமை காட்டிய குயில்கள் , மயக்கும் விதமாக பேசிய பிளாக் மெயிலர் லோகேஷை நம்பி ஜோடி போட்டி பாடி சூடுபட்டது தெரியவந்துள்ளது.

பெற்றோர்,கணவன் மற்றும் குழந்தைகளிடம் மனம் விட்டு பேசுவதை விடுத்து முக நூலிலும் , செல்போன் செயலிகளிலும் அறிமுகமாகும் வில்லங்க நண்பர்களிடம் மனம் விட்டு பேசினால் மானத்தோடு சேர்ந்து பணமும் பறி போகுமே தவிர மன நிம்மதி கிடைக்காது என்று ஏச்சரிக்கின்றனர் காவல்துறையினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments