வேற்றுமையில் ஒற்றுமை., நமது வலிமை... அனைவருக்குமான வளர்ச்சி.! ஐ.நா.அவையில் பிரதமர் பேச்சு.!

0 2862

வேற்றுமையில் ஒற்றுமையே நமது வலிமையான ஜனநாயகத்தின் அடையாளமாக விளங்குவதாகவும், அனைவரையும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதையில் இந்தியா முன்னேறிச் செல்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

நியூயார்க்கில் ஐ.நா. பொதுச்சபையின் 76ஆவது ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, நூறாண்டுகளில் இல்லாத அளவு மோசமான பெருந்தொற்றைக் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஒட்டுமொத்த உலகமும் எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விடுதலை பெற்று 76ஆம் ஆண்டில் இந்தியா காலடி எடுத்து வைத்துள்ள நிலையில், வேற்றுமையில் ஒற்றுமையே நமது வலிமையான ஜனநாயகத்தின் அடையாளமாக விளங்குவதாகக் குறிப்பிட்டார்.

டிஎன்ஏ அடிப்படையிலான உலகின் முதல் தடுப்பு மருந்தை இந்தியா தயாரித்துள்ளதாகவும், அதை 12 வயதுக்கு மேற்பட்டோருக்குச் செலுத்த முடியும் என்றும், மூக்கின் வழியாகச் செலுத்தும் தடுப்பு மருந்தை இந்திய அறிவியலாளர்கள் தயாரித்து வருவதாகவும் தெரிவித்தார். 

யாரும் பின்தங்கி விடக்கூடாது என்கிற கொள்கையின் அடிப்படையில் இந்தியா வளர்ச்சிப் பாதையில் முன்னேறிச் செல்வதாகவும்,  உலகப் பொருளாதாரம் மேலும் பன்முகப்படுத்தப்பட வேண்டும் என்பதை கொரோனா பெருந்தொற்று உலகுக்கு உணர்த்தியுள்ளதாகத் தெரிவித்தார்.

விடுதலையின் 75ஆம் ஆண்டையொட்டி இந்திய மாணவர்கள் தயாரித்துள்ள 75 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாகவும், ஹைட்ரஜனை எரிபொருளாகப் பயன்படுத்தும் நாடாக இந்தியாவை உருவாக்கும் வேலை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பயங்கரவாத அச்சுறுத்தலை உலகம் எதிர்கொண்டுள்ள சூழலில், அறிவியல் அடிப்படையிலான, பகுத்தறிவு மற்றும் முற்போக்குச் சிந்தனையை வளர்ச்சிக்கு அடிப்படையாக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

அறிவியல்முறையிலான அணுகுமுறையை வலுப்படுத்த அனுபவமுறையிலான கற்றலை இந்தியா வளர்த்து வருவதாகத் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தும் பிற்போக்குச் சிந்தனை கொண்ட நாடுகள் அது தங்களுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

பயங்கரவாதத்தைப் பரப்பவும், பயங்கரவாதச் செயல்களுக்கும் ஆப்கானிஸ்தான் பயன்படுத்தப்படக் கூடாது என்பதையும், ஆப்கனில் நிலவும் சூழலைத் தங்கள் சொந்த நலனுக்குச் சாதகமாக எந்த நாடும் பயன்படுத்தாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments