மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்: போலீசாரை ஏமாற்ற புரூடா வீடியோ?

0 4641

திருப்பத்தூர் அருகே, கோவிலுக்குப் போகலாம் என அழைத்ததை நம்பி பட்டுப்புடவை அலங்காரத்துடன் சென்ற காதல் மனைவிக்கு தூக்க மாத்திரை கொடுத்து, பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர கணவன், தப்பியோடி விட்டான். போலீசாரை ஏமாற்ற, தானும் சாகப்போவதாக கூறி வீடியோ வெளியிட்டுவிட்டு தலைமறைவான அவனை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.  

திருப்பத்தூர் மாவட்டம், புதுபூங்குளம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, கொட்டாவூர் பகுதியை சேர்ந்த பாணிபூரி வியாபாரி பெரியசாமியின் மகள் திவ்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில், இருவருக்கும் 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வரும் சத்தியமூர்த்திக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்ற திவ்யாவை, செல்ஃபோனில் பேசி சமாதானப்படுத்தி கோவிலுக்குச் செல்லலாம் என சத்தியமூர்த்தி அழைத்துள்ளான். அதை நம்பி அதிகாலை 4 மணிக்கு, பட்டுப்புடவை கட்டிக் கொண்டு, சத்தியமூர்த்தியுடன் திவ்யா சென்றுள்ளார்.

கணவனுடன் அவ்வப்போது சண்டையிட்டு சாப்பிடாமல் கிடந்த திவ்யாவுக்கு அல்சர் இருந்த நிலையில், கோவிலுக்கு செல்வதால் சாப்பிட நேரமாகும் எனக் கூறி மாத்திரை ஒன்றை சத்தியமூர்த்தி கொடுத்துள்ளான். அந்த மாத்திரையை சாப்பிட்டவுடன் திவ்யா மயக்கமடைந்துள்ளார். இதன் பிறகு, எலவம்பட்டி பகுதியிலுள்ள திருப்பத்தூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே, காலி நிலத்தில் திவ்யாவை கிடத்தி பெட்ரோலை ஊற்றி உயிரோடு தீ வைத்துள்ளான்.

அலறல் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது, தீயில் கருகி துடித்த நிலையில் திவ்யா கிடந்துள்ளார். 108 ஆம்புலன்சுக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்ததை அடுத்து, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.

உயிருக்கு போராடும் நிலையிலும், நடந்த விவரங்களை திவ்யா போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனக்கு 2 சிறுநீரகமும் செயலிழந்துவிட்டதால், தனக்குப் பிறகு மனைவியை யாரும் காப்பாற்ற மாட்டார்கள் என்பதால் தீ வைத்து எரித்ததாகவும், தானும் சாகப்போவதாகவும் எனவே உடலை தேட வேண்டாம் என்றும் சத்தியமூர்த்தி வீடியோ வெளியிட்டுள்ளான்.

சத்தியமூர்த்தி கூறுவது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை என கூறும் போலீசார், செல்போன் சிக்னல் மூலம் அவன் பதுங்கியுள்ள இடத்தை ட்ரேஸ் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments