பாதுகாப்புத் துறைக்கு 56 சி-295 விமானங்கள் : ஏர்பஸ்சுடன் உடன்பாடு

0 2202

ஏர்பஸ் டிபென்ஸ் அண்டு ஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து 22ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சி-295 வகையைச் சேர்ந்த 56 விமானங்களை வாங்குவதற்கான உடன்பாட்டில் இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பமிட்டுள்ளது.

ஏர்பஸ் டிபென்ஸ் அண்டு ஸ்பேஸ் நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப்படைக்கு சி-295 வகை போக்குவரத்து விமானங்களை வாங்க அரசு பேச்சு நடத்தி வந்தது.

இந்நிலையில் 56 விமானங்களை வாங்குவதற்கான உடன்பாட்டில் இன்று ஏர்பஸ் நிறுவன அதிகாரிகளும், பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் கையொப்பமிட்டுள்ளனர்.

அதன்படி ஏர்பஸ் - டாட்டா நிறுவனங்கள் கூட்டாக இணைந்து இவ்வகை விமானங்களை இந்தியாவிலேயே தயாரித்து வழங்கும். 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த உடன்பாடு 56 விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கும், அதற்கான தொழில்நுட்பத்தை இந்திய நிறுவனத்துக்கு வழங்குவதற்கும் வழிசெய்கிறது.

இதன்மூலம் பாதுகாப்புத் துறைக்கான விமானங்களைத் தனியார் நிறுவனம் தயாரிக்க வகை செய்யப்பட்டுள்ளது. சி 295 வகையைச் சேர்ந்த 40 விமானங்களை உள்நாட்டிலேயே தயாரித்து வழங்குவது என உடன்பாட்டில் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கான தொழிற்சாலையை அமைப்பதற்கு ஐதராபாத், பெங்களூர், குஜராத், உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்கள் பரிசீலனையில் உள்ளன. கடற்படை, கடலோரக் காவல்படை ஆகியவற்றுக்கும் தேவைப்பட்டால் மேலும் அதிக விமானங்கள் கொள்முதல் செய்யவும், தேவைக்கு மேல் தயாரிக்கும்போது விமானங்களை வெளிநாடுகளுக்கு விற்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments