2003ஆம் ஆண்டு ஆணவக் கொலை வழக்கு - பெண்ணின் அண்ணனை சாகும் வரை தூக்கிலிட உத்தரவு

0 3933

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட ஜோடியின் காது மற்றும் மூக்கில் விஷத்தை ஊற்றி கொடூரமாகக் கொன்று, உடல்களை எரித்த வழக்கில் பெண்ணின் அண்ணனுக்குத் தூக்குத் தண்டனையும் ஓய்வுபெற்ற டி.எஸ்.பி, காவல் ஆய்வாளர் உட்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த முருகேசன், குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த கண்ணகி இருவரும் இருவேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள். காதலில் விழுந்த இந்த முதுகலை பட்டதாரி ஜோடி, எப்படியும் தங்களது காதலை இரு குடும்பத்தினரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என முடிவெடுத்து, கடந்த 2003ஆம் ஆண்டு மே மாதம் கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இரகசியத் திருமணம் செய்துகொண்டனர்.

சினிமா பாணியில் திருமணத்தை மறைத்து அவரவர் வீட்டில் தனித் தனியாக வசித்து வந்த முருகேசனும் கண்ணகியும் ஒருகட்டத்தில் தத்தமது வீடுகளை விட்டு வெளியேறினர். இன்றைய கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் கண்ணகியை விட்டுவிட்டு, முருகேசன் ஸ்ரீமுஷ்ணம் அருகே வண்ணாங்குடிகாட்டிலுள்ள தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

கண்ணகி காணாமல் போன பிறகுதான் அவர்களது காதல் விவகாரமே குடும்பத்தினருக்குத் தெரியவந்துள்ளது. இதனையடுத்து தலைமறைவான ஜோடியைத் தேடி கொலை வெறியோடு களமிறங்கியது கண்ணகியின் குடும்பம். ஒரு வழியாக இருவர் இருக்குமிடமும் தெரியவந்து காதல் ஜோடியை வலுக்கட்டாயமாக சொந்த ஊர் அழைத்து வந்தனர்.

அருகிலுள்ள மயானத்துக்கு இருவரையும் அழைத்துச் சென்று கை, கால்களைக் கட்டி அடித்து, உதைத்து, காது வழியாகவும் மூக்கு வழியாகவும் விஷத்தை ஊற்றியது கொலைகார கும்பல். இதில் துடித்துடித்து உயிரிழந்தனர் முருகேசனும் கண்ணகியியும். பின்னர் இருவரது உடல்களையும் தனித்தனியே தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.

மகனைப் பறிகொடுத்துவிட்டு துடித்த முருகேசனின் தந்தை விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் போலீசார் வழக்கை விசாரிக்க முற்படாமல் மூடி மறைக்க முயன்றனர் என்று கூறப்படும் நிலையில், சம்பவம் ஊடகங்களில் வெளியாகி பேசுபொருளாக மாறியதால், வேறு வழியின்றி வழக்குப்பதிவு செய்தனர். பல்வேறு தரப்பினரின் போராட்டத்துக்குப் பின்னர் 2004ஆம் ஆண்டு இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அந்த ஆண்டே குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ.

குற்றப்பத்திரிக்கையில் கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரது மகன் மருதுபாண்டியன், வழக்கை சரியாக கையாளாமல் கொலையை மறைக்க முயற்சி செய்ததாக விருத்தாசலம் காவல் நிலையத்தின் அப்போதைய ஆய்வாளர் செல்வமுத்து, எஸ்.ஐ தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தது சி.பி.ஐ. கடலூர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில் 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறிப் போனார்கள். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று 13 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார் நீதிபதி உத்தமராசா. 2 பேரை விடுவித்தார்.

மிகவும் காட்டுமிராண்டித்தனமாக இந்தக் கொடுஞ்செயலை அரங்கேற்றியிருப்பதாக தெரிவித்த நீதிபதி, கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையையும் மற்ற 12 பேருக்கும் ஆயுள் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தார்.

உச்ச நீதிமன்றம் ஆணவக் கொலைக்காக வழங்கிய இரண்டு தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய அவர், “இந்த ஆணவக் கொலைகள் எளிய மக்களை அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறது” என்றும் “தமிழ் மண்ணில் கண்ணகி எரித்துக் கொல்லப்பட்டதே கடைசியாக இருக்க வேண்டும்” என்றும் கூறி தீர்ப்பை முடித்தார்.

மேலும், போலீஸாரால் பொய் வழக்கு போடப்பட்ட முருகேசனின் உறவினர் மூன்று பேருக்கு தலா 2 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். 

இத்தனை ஆண்டுகள் கழித்து தனது அண்ணனின் கொலைக்கு நீதி கிடைத்திருப்பதாகக் கூறி முருகேசனின் தம்பி வேல்முருகன் கண்கலங்கினார். அவரது தந்தை துரைக்கண்ணு, நீதிபதி உத்தமராசாவுக்கு கண்ணீருடன் நன்றி தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments