ரௌடிகளுக்கு செக்... கிளீனிங் ஆப்பரேஷன்... இரவோடு இரவாக போலீஸ் ஆக்சன்.!

0 3713

தமிழகம் முழுவதும் நள்ளிரவில் நடத்தப்பட்ட சோதனையில், தேடப்பட்டு வந்த நபர்கள் உட்பட, 529 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இரவோடு இரவாக ரௌடிகளுக்கு செக் வைத்து காவல்துறை நடத்திய கிளீனிங் ஆப்பரேஷன் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு

கடந்த சில நாட்களாக நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கேங் மோதல்கள், பழிவாங்குவதற்கான நடவடிக்கைகளும் அரங்கேறின.இந்த நிலையில், ரவுடிகளின் அராஜகத்தை ஒழிக்க டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தும் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, ரகசியமாகவும், அதே வேளையில் அதிரடியாகவும் நடவடிக்கை எடுக்க எண்ணிய காவல்துறை ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் Storming ஆப்ரேஷன் என்ற பெயரில் ரெளடிகளின் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்தது. அதன்படி, அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை லிஸ்ட் எடுத்த போலீசார், நள்ளிரவில் அவர்களின் வீடுகளில் புகுந்து திடீரென சோதனை நடத்தினர். இந்த சோதனையில் காவல்துறை உயர் அதிகாரிகளும் இருந்தனர்.

சென்னையில் புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீட்டில் காவல்துறை அதிகாரிகள் விடிய விடிய சோதனை நடத்தினர். இதேபோன்று, தியாகராய நகர், வடபழனி, அசோக்நகர், வளசரவாக்கம் பகுதிகளிலும் ரெய்டு நடத்தப்பட்டது. மொத்தமாக 870 பேரின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் துப்பாக்கிகள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு 529 ரௌடிகள் கைதாகியுள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட 529 பேரில் 181 பேர் நீதிமன்றப் பிடியாணையில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்ததும் தெரியவந்துள்ளது.

மற்றவர்கள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி நன்னடத்தை ஒப்பந்தத்தை மீறியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சோதனையில் 3 நாட்டு துப்பாக்கிகள், 250க்கும் மேற்பட்ட கத்திகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் சுமார் 700 பழைய வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி, அதில் 70 பேரை கைது செய்துள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தைப் பொறுத்தவரை பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 35 ரௌடிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மதுரை மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து ரவுடிகள் மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு, ஒவ்வொரு உட்கோட்டத்தில் ஒரு தனிப்படையும், ஒவ்வொரு காவல் நிலையத்தில் தனிப்படைகளும் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் 200க்கும் மேற்பட்ட ரௌடிகளை காவ நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், முதற்கட்டமாக அவர்களில் 35 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments