ஓவர் லோடு லாரிகள்... பழுத்தது ரூ 8 லட்சம்..!அதிகாரிகள் நடவடிக்கை..!

0 2330
விதியை மீறி அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றிச் சென்ற லாரிகள் ; அபராதம் விதித்த போக்குவரத்து துறை அதிகாரிகள்

சென்னை திருவொற்றியூரில் 3 லாரிகளில் ஏற்ற வேண்டிய சரக்குகளை விதியை மீறி அளவுக்கதிகமாக ஒரே லாரியில் ஏற்றிச்சென்ற 37 லாரிகளுக்கு 3 மணி நேரத்தில் 8 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதிகபாரம் ஏற்றிச்சென்று போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி சாலைகளை சிதைக்கும் சரக்கு போக்குவரத்து குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை துறைமுகத்திற்குள் ஏற்றுமதி இறக்குமதிக்காக தினமும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டெய்னர் லாரிகள் சென்று வருகின்றன. இங்கு சென்று வரும் பெரும்பாலான லாரிகளில் போக்குவரத்து சட்டவிதிகளை மீறி 20 டன் ஏற்ற வேண்டிய லாரியில் 60 டன் வரை கூடுதல் பாரம் ஏற்றுவதனால் வாகன விபத்துகள் மட்டுமன்றி, மற்ற வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி, சாலைகள் சேதமடைந்து லாரிகளும் தேய்மானம் அடைவதாக லாரி உரிமையாளர் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆண்டு லாரி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது ஒரு லாரிக்கு ஒரு கண்டெய்னர் மட்டுமே ஏற்றப்படும் என்றும், 35 டன் அளவுக்கு மட்டுமே லாரிகளில் பாரம் ஏற்றப்படும் என உறுதி அளித்து செயல்பட்டு வந்தனர். இந்தநிலையில், துறைமுக அதிகாரிகளின் அனுமதி, வட்டார போக்குவரத்து அதிகாரிகளின் அலட்சியத்தால் 35 டன் ஏற்ற வேண்டிய கண்டெய்னர் லாரிகளில் 80 டன் வரை லோடு ஏற்றி வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டதால் மீண்டும் பிரச்சனை ஏற்பட்டது.

அதிக பாரத்துடன் நெடுஞ்சாலையில் செல்லும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகம் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதுகுறித்து காவல்துறை ஆணையர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் துறைமுக அதிகாரிகள் என அனைவரிடமும் அனைத்துத்துறை டிரைலர் உரிமையாளர்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.

இதையடுத்து வியாழக்கிழமை காலை திருவொற்றியூர் எண்ணூர் கடற்கரை விரைவு சாலை எல்லையம்மன் கோயில் அருகே காலை 6 மணி முதல் 9 மணி வரை சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையர் உத்தரவின் பேரில் சிறப்பு வாகன சோதனை நடைபெற்றது.

சென்னை தண்டையார்பேட்டை, கொளத்தூர், அண்ணா நகர், அயனாவரம், புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக ஒவ்வொரு கண்டெய்னர் லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அதிக பாரங்களை ஏற்றி வந்த முப்பத்தி ஏழு லாரிகள் மீது வழக்குகள் பதிவு செய்து 8 லட்ச ரூபாய் அபராதம் விதித்தனர்.

நாகலாந்து மாநிலத்தில் இருந்து கார்கோ ஏற்றி வந்த 9லாரிகளை நிறுத்தி சோதனை செய்து போது தமிழ் நாட்டிற்கு செலுத்த வேண்டிய சாலை வரி 1 லட்சத்து 41 ஆயிரத்து 600 ரூபாய் செலுத்த வில்லை என்று தெரியவந்தது அதனை வசூலித்ததோடு அபராதம் கட்டத் தவறிய வாகனங்களை மஞ்சம் பக்கத்தில் உள்ள அரசு காலி இடங்களில் நிறுத்தி வைத்துள்ளனர்.

தினமும் 3 ஆயிரம் லாரிகள் இயக்கப்படும் நிலையில் 3 மணி நேரம் நடத்தப்பட்ட கனரக வாகன சோதனையில் 37 லாரிகள் சிக்கியுள்ளன. போக்குவரத்து அதிகாரிகள் நேர்மையாக தினமும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அதிகாரிகளை நியமித்து தொடர் சோதனை நடத்தினால் விதிகளை மீறி இயக்கப்படும் மேலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கும் என்று கூறப்படுகின்றது. கனரக வாகன போக்குவரத்தை சீரமைத்தாலே நெடுஞ்சாலையில் ஏற்படுகின்ற பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments