கல்லூரி மாணவி கழுத்தை அறுத்த ரயில் சினேகம்..! ஃபோர்டு ஊழியர் வெறிச்செயல்..!

0 6152
கல்லூரி மாணவி கழுத்தை அறுத்த ரயில் சினேகம்..! ஃபோர்டு ஊழியர் வெறிச்செயல்..!

சென்னை தாம்பரத்தில் கல்லூரி முடிந்து வகுப்பறையை விட்டு வெளியே வந்த மாணவி, தோழிகள் முன்பு கொடூரமாக குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரயில் சினேகத்தால் மலர்ந்த  காதலில் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் நிகழ்ந்த பயங்கரம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த பேருந்து ஓட்டுனரின் மகள் சுவேதா. இவர் தாம்பரம் எம்.சி.சி கல்லூரியில் பட்டயபடிப்பு படித்து வந்தார். வியாழக்கிழமை வகுப்பு முடிந்து தோழிகளுடன் வெளியே வந்த சுவேதாவை அவரது ஆண் நண்பர் ராமச்சந்திரன் என்பவர் மறித்து தனது செல்போன் அழைப்பை ஏற்காமல் யாருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தாய் எனக் கேட்டு தகராறு செய்துள்ளார்.

தோழியிடம் பேசியதாக சுவேதா கூறிய நிலையில், அதனை கேட்காமல் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன், சுவேதாவை தாக்கியதோடு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுவேதாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் அலறியபடியே சுவேதா சாய்ந்த நிலையில் அவரது தோழிகளும் அக்கம்பக்கத்தினரும் , கையில் கத்தியுடன் நின்றிருந்த ராமச்சந்திரனை சுற்றிவளைத்த நிலையில் தன்னை தானே கழுத்தை லேசாக அறுத்துக் கொண்டு அங்கேயே மயங்கி விழுந்தார் ராமச்சந்திரன்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், லேசான காயத்துடன் மயங்கி கிடந்த ராமச்சந்திரனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரயில் சினேகத்தால் மலர்ந்த காதல், கருத்துவேறுபாட்டால் பிரிந்ததால், நிகழ்ந்த விபரீதம் வெளிச்சத்திற்கு வந்தது.

கடந்த 2019ஆம் ஆண்டு மாணவி சுவேதா, விடுமுறை நாளில் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள தனது பாட்டியின் வீட்டுக்கு ரெயிலில் செல்லும் போது ராமச்சந்திரனை சந்தித்துள்ளார். தன்னை போர்டு நிறுவன ஊழியர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட ராமச்சந்திரன், சுவேதாவுடன் நட்புடன் பழகியுள்ளார். எதேச்சையாக 3 முறைக்கும் மேலாக இதே போல ரெயிலில் சந்தித்ததால் அவர்களுக்குள் ஏற்பட்ட சினேகத்தால் காதல் மலர்ந்ததாகவும், இடையில் வந்த கொரோனா ஊரடங்கால் ஊருக்கு செல்ல இயலாமலும், நேரில் சந்திக்க முடியாமலும் செல்போனிலேயே காதலை வளர்த்து வந்துள்ளனர்.

இரவு நேரங்களில் தினமும் ராமச்சந்திரனிடம் மணிக்கணக்கில் பேசிவந்த சுவேதா, அண்மையில் பேசுவதை குறைத்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. கடந்த சில தினங்களாக இரவு நேரங்களில் ராமச்சத்திரன் அழைக்கும் நேரத்தில் சுவேதா வேறு காலில் பேசிக் கொண்டிருந்ததாகவும், தனது கால் வெயிட்டிங்கில் இருந்தாலும் சுவேதா கண்டு கொள்ளாததால் ராமச்சந்திரன் ஆத்திரம் அடைந்துள்ளான்.

இது குறித்து சந்தேகத்துடன் கேட்டு சண்டையிட்ட ராமச்சந்திரனின் நடவடிக்கை பிடிக்காததால் அவருடன் பேசுவதை சுவேதா முழுவதுமாக நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகின்றது. தனது அழைப்பை ஏற்காத சுவேதாவை நேரில் சந்திக்க அழைத்துள்ளான் ராமச்சந்திரன். ஆனால் சுவேதா சந்திக்க மறுத்துள்ளார்.

போர்டு நிறுவன ஊழியர்கள் வேலையிழப்பு போராட்டம் போன்ற மன உளைச்சலோடு, காதலியும் தன்னை கழற்றிவிடுவதால் உண்டான ஆத்திரத்தால் அவரை கொலை செய்யும் திட்டத்துடன் கத்தியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்றுள்ளார் ராமச்சந்திரன் , அங்கு நீண்ட நேரம் காத்திருந்து, சுவேதா கல்லூரியை விட்டு வந்ததும் அவரிடம் தகராறு செய்து கத்தியால் குத்திக் கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து முதல் உதவி சிகிச்சைக்கு பின் ராமச்சந்திரனை கைது செய்த காவல்துறையினர் ரகசிய இடத்தில் வைத்து அவரிடம் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே தங்கள் கண்முண்ணே நிகழ்ந்த பயங்கர சம்பவத்தை கண்டு சுவேதாவின் தோழிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி கதறி அழுதனர்.

கண்டதும் காதல் கொண்டதால் , கொண்டவன் நல்லவனா கெட்டவனா என்பதை முழுமையாக அறிந்து கொள்வதற்குள் எல்லாம் முடிந்து விட்டதாக காவல்துறையினர் சுட்டிக்காட்டுகின்றனர். பெண்கள் கவனமுடன் காதலனை தேர்தெடுக்க தவறினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவமே சான்று .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments