120 சவரன் நகைக்காக அண்ணன் மனைவியை திருமணம் செய்த தம்பி..! தலையாரி பாண்டி குடும்பம் சிக்கியது

0 13115

கணவன் உயிரிழந்த நிலையில் கணவனின் தம்பியை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் வரதட்சணைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரை அருகே நிகழ்ந்துள்ளது. வரதட்சணைக்காகவே விதவையான, அண்ணன் மனைவியை காதலில் வீழ்த்திய கந்துவட்டி மாப்பிள்ளை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

மதுரை K.பாறைப்பட்டியைச் சேர்ந்த தலையாரி பாண்டி மகன் பிரபாகரன் என்பவருக்கும், காளவாசல் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி மாளவிகாவுக்கும், கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது பெண் வீட்டுச் சீதனமாக 120 சவரன் நகையும், 10 லட்ச ரூபாய் ரொக்கமாகவும் மாப்பிள்ளை வீட்டாருக்கு கொடுத்துள்ளனர். திருமணமான 10 மாதங்களில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட பிரபாகரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.

10 மாதங்களில் வாழ்க்கையை இழந்த மாளவிகா கைம்பெண்ணாக, தனது பெற்றோர் வீட்டுக்கே திரும்பிச் சென்றுள்ளார். அவருக்கு சீதனமாகக் கொடுத்த நகை மற்றும் பணத்தையும் சண்டை போட்டு பெண் வீட்டார் திரும்பி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டைப்ரைட்டிங் வகுப்புக்குச் சென்று வந்த மாளவிகாவை தனியாக சந்தித்து மூளைச்சலவை செய்யத் தொடங்கி உள்ளான் பிரபாகரனின் தம்பி பிரகாஷ். தான் புதிய வாழ்க்கை தருவதாகவும் , அண்ணனை விட நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் ஆசைவார்த்தைக்கூறி சாமர்த்தியமாக காதலில் வீழ்த்தியதாக சொல்லப்படுகிறது.

5 மாதம் இருவரும் பழகி வந்த நிலையில் கணவரின் தம்பியை 2ஆவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக மாளவிகா கூறவே, அவரது வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆனால், அதையும் மீறி வீட்டை விட்டு வெளியேறி காதலன் பிரகாஷை தனது பெற்றோருக்குத் தெரியாமல் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்துள்ளார் மாளவிகா. இதனால் அதிர்ந்து போனதாக கூறப்படும் மாளவிகாவின் பெற்றோர் மகளிடம் பேசாமல் இருந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

மீண்டும் தலையாரி பாண்டி வீட்டுக்கு மருமகளாக மாளவிகா வந்து சில மாதங்களேயான நிலையில் சம்பவத்தன்று மாளவிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தாரின் வரதட்சணை கொடுமையால் தங்கள் மகள் மாளவிகா தற்கொலை செய்து கொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ள அவரது பெற்றோர், மாளவிகாவுக்கு நடந்த கொடுமைகளைப் பட்டியலிட்டுள்ளனர். பிரபாகரன் இறந்தவுடன் திரும்ப பெற்ற வரதட்சணையை மீண்டும் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கில் தலையாரி பாண்டி, எந்த வேலைக்கும் செல்லாமல் ஊதாரியாக சுற்றிக்கொண்டிருந்த இளையமகன் பிரகாஷ் மூலமாக ஏமாற்றி மாளவிகாவுக்கு காதல் வலை விரித்து 2ஆவது திருமணம் செய்து வைத்துள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருமணம் முடிந்த மறுநாளே பிரபாகரனுக்கு வரதட்சணையாகக் கொடுத்த அதே 120 சவரன் நகை, 10 லட்ச ரூபாய் பணத்தைக் திரும்ப கேட்டு வாங்குமாறு மாளவிகாவுக்கு, பிரகாஷ் வீட்டில் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. பேசாமல் இருந்தாலும், மகளின் வாழக்கைக்காக 80 சவரன் நகை, 5 லட்ச ரூபாய் ரொக்கத்தை மாளவிகாவின் பெற்றோர் மீண்டும் கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால் அதனை ஏற்காமல் மீதமுள்ள நகையையும் பணத்தையும் வாங்கி வரச்சொல்லி மாளவிகாவை கொடுமைப்படுத்தி வந்தனர் என்று, அவரது பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். தங்கள் மகள் சாவில் சந்தேகம் உள்ளதாகவும் மாளவிகாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் கந்துவட்டிக்காரனை போல வரதட்சணை வசூலிப்பதில் தீவிரம் காட்டிய காதல் மாப்பிள்ளை பிரகாஷையும் அவனது தந்தை தலையாரி பாண்டியையும் தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் போலீசார் கைது செய்தனர். நகை பணம் என்று பேராசை பிடித்து மருமகளின் வாழ்க்கையோடு விளையாடியதால், மாமியார் போலீசுக்கு பயந்து ஓடிவருகிறார்..!

மாளவிகாவுக்கு பெற்றோர் பார்த்து வைத்த வாழ்க்கை பாதியில் முடிந்த நிலையில், காதலால் தானாக தேடிக் கொண்ட வாழ்க்கையோ, அவரது உயிரையே முடித்து வைத்திருப்பது சோகத்திலும் சோகம்..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments