இருக்கு ஆனா இல்லை..! கூட்டுக்கொள்ளை வங்கியில் ரூ3 கோடி நகைகள் மாயம்..!

0 3367

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே கூட்டுறவு வங்கியில்  நகையே இல்லாமல் 3 கோடி ரூபாய்க்கு நகைகள் அடகு வைக்கப்பட்டு இருப்பதாகக் கூறி வெற்றுப்பைகளை வைத்து மோசடி செய்த  வங்கித் தலைவர் தலைமையிலான கும்பல் கூண்டோடு சிக்கியுள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதல் அமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதும் வங்கி மேல் அதிகாரிகள் அனைத்து கூட்டுறவு வங்கிகளில் அடமானமாக வைக்கப்பட்ட நகைகளின் விபரங்களை அறிய கூட்டுறவு வங்கிகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அடுத்த அங்கமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் திருச்செந்தூர் கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மற்றும் சார்பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த 8ம் தேதி மற்றும் 13ம் தேதி நகைக்கடன்கள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மொத்தம் நகைக்கடனாக பெறப்பட்ட நகைகள் வங்கியில் உள்ள லாக்கரில் 548 பைகளில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. ஆய்வு செய்த போது அந்த பைகளில் 261 நகைப் பைகள் மாயமானது தெரியவந்தது.

இது ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திங்கட்கிழமை வரை நடத்தப்பட்ட விசாரணையில் நகையே இல்லாமல் நகைக்கடன் என்ற பெயரில் 2 கோடியே 3 லட்சத்து 92 ஆயிரத்து 700 ரூபாய் மோசடி செய்தது தெரியவந்து. இதுகுறித்து வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு தெரியவந்ததால் அடகு வைத்த நகைகள் குறித்து விசாரணை அதிகாரியிடம் கேட்டறிந்து புகார் மனுக்களை கொடுத்து சென்றனர்.

இதேபோல் வங்கியில் டெபாசிட் செய்த பணம் இருக்கிறதா ? என்று வாடிக்கையாளர்கள் வந்து பார்த்தபோது, டெபாசிட் பணத்தை வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்காமல் அவர்களுக்கு போலியான பாண்ட்  கொடுத்தது தெரியவந்தது. தொடர்ச்சியாக வங்கியில் லட்சக்கணக்கில் பணத்தை டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் விசாரணை குழுவினரிடம் புகார் அளித்து வருகின்றனர்.

நகை மட்டுமல்லாமல், பணத்தையும் சேர்த்து, 3 கோடி ரூபாய்க்கும் மேல் மோசடி செய்திருப்பதாக கூறப்படுகின்றது. முதற்கட்டமாக வங்கி தலைவர் முருகேசப்பாண்டியன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். செயலாளர் தேவராஜ், துணைச் செயலாளர் ஜான்ஸி சந்திரகாந்தா ஞானபாய், ஆழ்வை. வட்டார கூட்டுறவு வங்கி கள அலுவலர் ஆழ்வார் குமார் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் இந்த மோசடி தொடர்பாக நடவடிக்கை எடுக்க காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments