போலீஸ் ஏட்டையா..! லேடீஸ் முன்பு டவுசர கழற்றியது தப்பய்யா..! சண்டே அலப்பறை வீடியோ..!

0 5056
போலீஸ் ஏட்டையா..! லேடீஸ் முன்பு டவுசர கழற்றியது தப்பய்யா..! சண்டே அலப்பறை வீடியோ..!

சென்னையில் போக்குவரத்து தலைமை காவலர் ஒருவர் போதையில் வீட்டுக்கு அருகே பெண்கள் முன்பு தனது ஆடைகளை களைந்து அட்டகாசத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகார போதையுடன் குடிகார போதையும் தலைக்கேறியதால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

சென்னை அம்பத்தூர் ஓரகடம் பகுதி ஏ.கே நகர் பெரியார் குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவர் கோயம்பேடு போக்குவரத்துப் பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசித்துவரும் காய்கறி வியாபாரியான முருகன் என்பவருக்கும் இடையே வாகனம் நிறுத்துவது தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை என்பதால் மது போதையில் அரைக்கால் டவுசருடன் இருந்த தலைமை காவலர் கிருஷ்ணகுமார், காய்கறி வியாபாரி முருகனிடம் சென்று, நான் வரும் வழியில் வாகனங்களை எதற்காக நிறுத்துகிறாய் என்று போலீஸ் என்ற அதிகாரத்துடன் வலியச்சென்று வம்பிழுத்து வாகனத்தை எட்டி உதைத்து கீழே தள்ளி அட்டகாசம் செய்து ஆபாசமாக திட்டியுள்ளார்.

கிருஷ்ணகுமார் போலீஸ் என்பதால் எதிர்த்து பேசாமல் முருகன் அமைதியாக தனது கடைக்கு சென்றுவிட, போதை தலைக்கேறிய போலீஸ் ஏட்டு கிருஷ்ணகுமார் முருகனின் வீட்டருகே சென்று அவருடைய மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதுடன், ஆபாச வார்த்தைகளால் திட்டி அடிக்க முயற்சித்தார்.

அங்கிருந்தவர்களும், கிருஷ்ணகுமார் வீட்டு பெண்களும் அவரை சமாதானப்படுத்த முயற்சிக்க கட்டுப்படாத போலீஸ் ஏட்டு கிருஷ்ணகுமார், திடீரென்று தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்று ஆபாச சவால் விடுத்ததால் அங்கிருந்த பெண்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த முருகேசன் குடும்பத்தினர் இதுகுறித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்டு விசாரிப்பதாக கூறிய அங்கிருந்த போலீசார் விசாரிக்காமல் மெத்தனம் காட்டியதால், முருகேசன் அவரது குடும்பத்தினருடன் அம்பத்தூர் இணை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று புகார் அளித்தார். இதையடுத்து போலீஸ் ஏட்டு கிருஷ்ணகுமாரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே இவரது போதை அட்டகாசம் உயர் காவல் அதிகாரிகளுக்கு தெரிந்துவிட்டதால் எங்கே வேலை போய்விடுவோ என்ற ஆச்சத்தில் காய்கறி வியாபாரி முருகன் குடும்பத்தினரிடம் போலீஸ் ஏட்டு மன்னிப்பு கேட்டதாகவும் ஆனால் அவர்கள் புகாரை வாபஸ் பெற மறுத்து விட்டதாகவும் கூறப்படுகின்றது.

மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய மகத்தான காவல் பணியில் இருந்து கொண்டு , வீதியில் வம்பிழுத்து , கண்ணியமில்லாமல் ஆபாசமாக பேசி கட்டுப்பாடில்லாமல் ஆடைகளை களைந்து ரகளை செய்த ஏட்டுவுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்பாக உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments