5 அழுகிய சடலங்களுடன்... 4 நாட்கள் தவித்த சிறுமி..! ஆத்திரத்தால் அழிந்த குடும்பம்.!

0 9009
பெங்களூரு அருகே மனைவி மகள் மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 4 நாட்களாக அழுகிய சடலங்களுக்கிடையே சாப்பிடாமல் உயிர்வாழ்ந்த சிறுமி உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். வாழ்க்கையில் விரக்தி அடைந்து குடும்பத்தலைவர் வீட்டை விட்டு வெளியேறியதால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

பெங்களூரு அருகே மனைவி மகள் மற்றும் மகன் என ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 4 நாட்களாக அழுகிய சடலங்களுக்கிடையே சாப்பிடாமல் உயிர்வாழ்ந்த சிறுமி உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். வாழ்க்கையில் விரக்தி அடைந்து குடும்பத்தலைவர் வீட்டை விட்டு வெளியேறியதால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

பெங்களூரு அடுத்த சேத்தன் சர்க்கிள் பகுதியில் வசித்து வருபவர் சங்கர். சொந்தமாக பத்திரிகை ஒன்றை நடத்தி வருவதுடன், அதன் ஆசிரியராகவும் உள்ளார். இவருக்கு பாரதி என்ற மனைவியும், சிஞ்சனா, சிந்துராணி ஆகிய இரு மகள்களும் , மதுசாகர் என்ற மகனும் 3 வயது பேத்தியும், 9 மத பேரக்குழந்தையும் இருந்தனர்.

சம்பவத்தன்று சங்கர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது மனைவி பாரதி, இரு மகள்கள் மற்றும் மகன் ஆகிய 4 பேரும் தூக்கிட்டு இறந்து கிடந்தனர். அவர்களுக்கு அருகில் 9 மாத பேரக்குழந்தை இறந்து கிடந்தது. உயிருக்கு போராடிய 3 வயது பேத்தி மட்டும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

போலீஸ் விசாரணையில் , இந்த விபரீத தற்கொலைக்கு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் ஈகோவுடன் சண்டையிட்டுக் கொண்டது தான் காரணம் என்பது தெரியவந்துள்ளது. சங்கர் - பாரதி தம்பதியின் மூத்த மகளான சிஞ்சனாவுக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு பிரவீன் என்பவருடன் திருமணமானது. அவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ள நிலையில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 1½ ஆண்டுகளாக கணவரை பிரிந்து சிஞ்சனா தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

2-வது மகள் சிந்துராணிக்கும், ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 9 மாத ஆண் குழந்தை இருக்கும் நிலையில் தங்கள் மகனுக்கு யார் பெயர் சூட்டுவது ? என்று ஏற்பட்ட தகராறில் சிந்துராணி, கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்து விட்டார். இந்த நிலையில் மகள்களை சமாதானப்படுத்தி அவரவர் கணவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கும்படி மனைவி பாரதியிடம் சங்கர் கூறியதால், கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மகள்களும் கணவர் வந்து அழைக்கட்டும் பார்க்கலாம் என்று சங்கரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகின்றது.

இதற்கிடையே என்ஜினீயரிங் படித்துள்ள மகன் மதுசாகருக்கு சரியான வேலை இல்லாததால் பார் மற்றும் ரெஸ்டாரண்ட் வைத்து கொடுக்க வேண்டும் என்று மனைவி பாரதி அடம் பிடித்துள்ளார். இதற்கு சங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் மனைவியும் , மகனும் சங்கரிடம் தகராறு செய்ததால் வேறுவழியின்றி மகனுக்கு பார் அன்டு ரெஸ்டாரண்ட் வைத்து கொடுக்க 20 லட்சம் ரூபாயை சங்கர் கொடுத்ததாக கூறப்படுகின்றது.

மேலும் மகனுக்கு திருமணம் செய்து வைக்க வரன் தேடியபோது இரு மகள்களும் கணவனிடம் சண்டை போட்டு பிரிந்து வந்து தாய் வீட்டில் இருப்பதால் சம்பந்தம் ஒன்றும் அமையவில்லை என்று கூறப்படுகின்றது. கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டதால் சொத்துக்களை எல்லாம் விற்று பணத்தை மொத்தமாக மனைவியிடம் கொடுத்துவிட்டு, அமைதியாக தனிமையில் வசிப்பதற்காக ஆசிரமம் அமைப்பதாக கூறி 10 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் அதற்கு குடும்பத்தினர் சம்மதிக்காததால் கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார் சங்கர். இதனால் தனது மனைவியும் அவரது தூண்டுதலின் பேரில் இரு மகள்களும், மகனும் தற்கொலை செய்திருக்கலாம் என்று சங்கர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட 4 பேரும் 9 மாத ஆண்குழந்தையையும், 3 வயது சிறுமியையும் ஒன்றும் செய்ய மனமில்லாமல் அப்படியே விட்டுச்சென்றுள்ளனர். இதில் அந்த 9 மாத குழந்தை நீண்ட நேரம் பாலுக்காக அழுது பசியால் மயங்கிய நிலையில் உயிரைவிட்டதாக 4 நாட்களாக அழுகிய சடலங்களுடன் இருந்து மீட்கப்பட்ட அந்த சிறுமி கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல அந்த சிறுமி எப்படியும் தனது தாய் இறங்கி வந்து விடுவார் என்று தூக்கில் தொங்கிய தாயிடமே இருந்துள்ளார். பூட்டப்பட்ட கதவை திறந்து வெளியே செல்ல வேண்டும் என்ற எண்ணம் கூட அந்த சிறுமிக்கு தோன்றாத நிலையில் சங்கர் வந்து வீட்டின் கதவை திறந்து பார்த்து உயிருக்கு போராடிய தனது பேத்தியை கையில் தூக்கிக் கொண்டு அக்கம் பக்கத்து வீடுகளில் தண்ணீர் வாங்கிக்கொடுத்து முதல் உதவி அளித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது தான் சிறப்பான வாழ்க்கை, கணவன் ,மனைவியோ, தந்தை. மகளோ ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டுமே தவிர ஈகோவுடன் எல்லாவற்றிற்கும் சண்டையிட்டுக் கொண்டே இருந்தால் என்ன மாதிரியான விபரீதம் அரங்கேறும் என்பதற்கு இந்த சோக சம்பவமே சாட்சி..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments