நான் "அவள்" இல்லை "அவன்"..! கொலையில் முடிந்த முறையற்ற காதல்..!

0 6223
நான் "அவள்" இல்லை "அவன்"..! கொலையில் முடிந்த முறையற்ற காதல்..!

ஃபேஸ்புக்கில் தன்னைப் பெண்ணாக சித்தரித்து, போலியான புகைப்படத்தைப் பதிவேற்றி இளைஞர் ஒருவரை ஏமாற்றி போன் மூலமே 2 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நபர் ஒருவர், அந்த இளைஞராலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். சமூக வலைதளங்களை கவனமாகக் கையாளத் தெரியாவிட்டால் என்ன மாதிரியான முடிவுகள் ஏற்படும் என்பதை இந்த சம்பவம் விளக்குகிறது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே மேலக்கரந்தை மயானம் அருகிலுள்ள காட்டு பகுதியில் கடந்த 15ந்தேதி அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று மீட்கப்பட்டது. விசாரணையில் அது மேலஈரால் கிராமத்தினைச் சேர்ந்த முருகன் என்பவருடையது எனத் தெரியவந்தது. முருகனின் செல்போனை ஆய்வு செய்த போது, குறிப்பிட்ட ஒரு எண்ணில் இருந்து முருகன் போனுக்கு அடிக்கடி அழைப்பு வந்திருந்ததும் தெரியவந்தது. அந்த எண் காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் பகுதியை சேர்ந்த மற்றொரு முருகன் என்பவருடையது என்பதை கண்டறிந்த போலீசார், அவரை விசாரிப்பதற்காக காஞ்சிபுரம் செல்லவிருந்தனர். அதற்குள் சனிக்கிழமை கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு காஞ்சிபுரம் முருகனே சென்றுள்ளார். கொலை செய்தபோது தான் விட்டுச் சென்ற தனது மணிபர்சை எடுப்பதற்காக வந்த அவரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தினை சேர்ந்த முருகன், வாகனங்களுக்கான கூலிங் கண்ணாடி தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய முகநூல் பக்கத்திற்கு அமுதா என்ற பெயரில் குறுச்செய்தி வந்துள்ளது. அமுதா கொடுத்த எண்ணில் தொடர்பு கொண்ட போது பெண் குரல் கேட்கவே, அது உண்மை என நம்பி தினமும் மணிக்கணக்கில் பேச தொடங்கியுள்ளார் காஞ்சிபுரம் முருகன். அமுதா எண்ணிலிருந்து வந்த புகைப்படத்தினை பார்த்த காஞ்சிபுரம் முருகன், அவரைக் காதலிப்பதாக கூற, அந்த பெண்குரலும் காதலிப்பதாக கூற இருவரும் காதலை வளர்த்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 14ந்தேதி காதலர் தினத்தில் மதுரை மாட்டுத்தவணி பேருந்து நிலையத்தில் சந்திக்கலாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. காதலியை பார்க்கப் போகிறோம் என்ற குறுகுறுப்போடும் கலர் கலரான கனவுகளோடும், அமுதா பெயரில் வந்த புகைப்படத்தை பார்த்தவாறே 6 மணி நேரம் பயணித்து மதுரை வந்திறங்கி இருக்கிறார் காஞ்சிபுரம் முருகன். ஆனால் 2 ஆண்டுகளாக போனில் பெண் குரலில் பேசியது தாம்தான் என மேலஈரால் முருகன் சொல்லவும் உலகமே இருண்டிருக்கிறது காஞ்சிபுரம் முருகனுக்கு. ஏமாற்றம், கோபம் எல்லாம் சேர அவருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் முருகன். ஒரு கட்டத்தில் காஞ்சிபுரம் முருகனை சமாதானம் செய்த மேலஈரால் முருகன், அவரை தனியாக அழைத்துச் சென்று ஓரினச் சேர்க்கைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்து ஊர் திரும்பிய காஞ்சிபுரம் முருகன், செல்போன் எண்ணை மாற்றிவிட்டு, தன் வேலையைப் பார்க்கத் தொடங்கி இருக்கிறார். அவருடைய குடும்பத்தார் மூலம் மீண்டும் முருகனின் எண்ணை வாங்கிய மேலஈரால் முருகன், இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டதை வீடியோவாக எடுத்து வைத்துள்ளதாகவும் தன்னோடு உறவைத் தொடர வேண்டும் அல்லது 50 ஆயிரம் ரூபாய் பணம் தர வேண்டும் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. பயந்துபோன காஞ்சிபுரம் முருகன், வீடியோவை எப்படியாவது அழிக்க வேண்டும் என முடிவெடுத்து, தூத்துக்குடி கிளம்பிச் சென்றுள்ளார். கடந்த 14ஆம் தேதி மேலக்கரந்தை காட்டுப் பகுதியில் இருவரும் அமர்ந்து மது அருந்தியுள்ளனர். மேலஈரால் முருகன் கவனிக்காத ஒரு தருணத்தில் அவருக்கு வைத்திருந்த மதுவில் மயக்க மருந்தைக் கலந்த காஞ்சிபுரம் முருகன், அவன் மயக்கமுற்றதும் தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்திருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதலங்கள் நல்ல கருத்துகளை பரிமாறிக் கொள்ளும் களமாக மட்டும் இல்லாமல், பண மோசடி, பெண் மோசடி என பல்வேறு தரப்பட்ட குற்றங்களுக்கும் களமாக இருப்பதாகக் கூறும் போலீசார், அவற்றை கவனமாகக் கையாள வேண்டும் என எச்சரிக்கின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments