வாக்கிங்போன புது மாப்பிள்ளை.. கார் மோதி உயிரிழந்த சம்பவம்: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி

0 4348

செங்கல்பட்டு அருகே, நடைப்பயிற்சி சென்றுகொண்டிருந்த புது மாப்பிள்ளை கார் மோதி உயிரிழந்த சம்பவத்தின், பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மனைவிக்கு, கணவன் கார் ஓட்ட கற்றுக் கொடுக்கும்போது நேர்ந்த இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு அருகே மகேந்திராசிட்டி பகுதியை சேந்த செல்வம், ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு செல்வத்திற்கு திருமணம் நடந்துள்ளது. மகேந்திராசிட்டி பகுதியில் தினமும் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த செல்வம், கடந்த 13ஆம் தேதி அதிகாலையில் வாக்கிங் சென்றுள்ளார். அப்போது பின்னால் வந்த கார் மோதி பல அடி உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டு, உயிரிழந்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

செல்வம் வாக்கிங் சென்றபோது, பாதசாரிகளுக்குரிய நடைமேடையில் இருந்து விலகி, சாலையில் நடந்து செல்வது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கார் பின்னால் வருவதை உணர்ந்து அவர் இடதுபுறம் ஒதுங்கும் நேரத்தில் கார் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளார்.

அதேசமயம் விபத்தை ஏற்படுத்திய கார், இடதுபுறம் ஒட்டினாற்போல வந்து மோதியதும் பதிவாகியுள்ளது. கார்த்திகேயன் என்ற நபர் தனது மனைவிக்கு கார் ஓட்ட பயிற்சி அளித்தபோது விபத்து நேரிட்டுள்ளது. காரை ஓட்டிய பெண் பழகுவதற்கான உரிமம் பெற்றிருந்தாரா, கார் ஓட்ட பயிற்சி அளித்த கணவர் முறையாக ஓட்டுநர் உரிமம் பெற்றுள்ளாரா என விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்து ஏற்படுத்திய காரில் எல் போர்டு எதுவும் இல்லை. காரை பறிமுதல் செய்து, விபத்து என வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments