ஊனம் ஒரு தடையல்ல: இரு கால்களை இழந்தாலும் சிகரம் தொட்ட சிங்கப் பெண்

0 2825
ஊனம் ஒரு தடையல்ல: இரு கால்களை இழந்தாலும் சிகரம் தொட்ட சிங்கப் பெண்

ரயில் விபத்தில் இரு கால்களையும் இழந்த மும்பை பெண் ரோஷன் ஜவ்வாத், மனம் தளராமல் மருத்துவத்தில் எம்.,டி எனும் மேற்படிப்பை முடித்து, சாதிக்க  துடிப்பவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

மும்பை புறநகர் பகுதியான ஜோஹேஸ்வரியில், தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வந்த ஜவ்வாத் ஷேக்கின் மகளான ரோஷன் 2008ஆம் ஆண்டு அக்டோபரில், அந்தேரியில் இருந்து ரயிலில் திரும்பும்போது அளவுக்கதிகமான கூட்டம் காரணமாக தவறி தண்டவாளத்தில் விழுந்ததில், ஓடும் ரயில் ஏறி இரு கால்களையும் இழந்துள்ளார்.

மனம் தளராத ரோஷன், எம்.பி.பி.எஸ் நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றாலும் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. 70 சதவீதம் வரை உடல் ஊனம் இருந்தாலும் எம்.பி.பி.எஸ் படிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்ற நிலையில், ரோஷனுக்கு ஏற்பட்ட ஊனம் 86 சதவீதம் என்பதால் இடம் கிடைக்கவில்லை. மீண்டும் மனம் தளராத ரோஷன் மும்பை உயர்நீதிமன்றத்தின் கதவுகளை தட்டினார். மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த மொஹித் ஷா உத்தரவின் அடிப்படையில், எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்து 2016ஆம் ஆண்டில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

2018-ல் எம்.டி. எனப்படும் மருத்துவ மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வில் வெற்றிபெற்றாலும் 86 சதவீத ஊனம் என்பதை காரணம் காட்டி சேர்க்கை வழங்கப்படவில்லை. ஆனால் அப்போது எம்.பி.யாக இருந்த கிரித் சோமையா, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியதால், விதிகள் தளர்த்தப்பட்டு, எம்.டி pathology படிப்பில் ரோஷனுக்கு இடம் கிடைத்தது. இடையூறுகள் அத்துடன் முடிந்துவிடவில்லை. இரண்டாம் ஆண்டு படிக்கும்போது எலும்புக் கட்டி ஏற்பட்டு, அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.

இத்தனை தடைகளையும் தாண்டி கல்லூரியிலேயே 4ஆம் இடம்பெற்று, 65 சதவீத மதிப்பெண்களுடன் எம்.டி. படிப்பை முடித்துள்ளார் 29 வயது ரோஷன். மருத்துவ வசதி இல்லாத ஊரகப் பகுதியில் ஆய்வகம் மற்றும் டயாக்னாஸ்டிக் சென்டர் தொடங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறும் ரோஷன், உறுதியான உள்ளம் மட்டுமல்ல, உயர்ந்த உள்ளம்தான்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments