தரமான உணவே... நிறைவான ஆரோக்கியம்.. வழிமுறைகள் என்னென்ன?

0 34636

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு கடைகளில், மீண்டும், மீண்டும் பயன்படுத்திய 200 லிட்டர் எண்ணெய்யை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில், உணவகங்கள், உணவுப் பொருள் தயாரிப்பின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையில், இனிப்பு, கார வகைகள் தயாரிக்கும் 100-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அங்குள்ள கடைகள் உணவுப் பொருட்கள் தயாரிக்க ஒரு முறை பயன்படுத்தும் எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்தக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை மீறியும் சில கடைகளில் தரமில்லாமல் உணவுப் பொருட்கள் தயாரிப்பதாக வந்த புகாரின் பேரில், 100-க்கும் மேற்பட்ட  கடைகளில் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர். அதில், சுமார் 40 கடைகள் ஒரு நாள் உபயோகித்த எண்ணையையே மீண்டும் மீண்டும் பயன்படுத்தி இனிப்பு, கார வகைகள் தயார் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, பல முறை பயன்படுத்தப்பட்ட 200 லிட்டர் எண்ணையெயை பறிமுதல் செய்தனர். சமீபத்தில் கூட திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நட்சத்திர ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்ட சிறுமி உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில், FSSAI எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, உணவகங்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் வெளியாகியுள்ளன. அதன்படி, உணவு விற்பனை கூடத்தை, தூய்மையாகவும், சுத்தமாகவும், பூச்சிகள் இல்லாதவாறும் பாதுகாக்க வேண்டும். உணவு தயாரிக்க குடிநீரை பயன்படுத்த வேண்டும்.

முழுவதும் சமைத்த சூடான உணவை 60 டிகிரி செண்டிகிரேடு வெப்பநிலையில் வைக்க வேண்டும். குளிர்ச்சியான உணவை 5 டிகிரி செண்டிகிரேடுக்கும் குறைவான தட்ப வெப்பநிலையிலும், உறைய வைக்க வேண்டிய பொருட்களை மைனஸ் 18 டிகிரிக்கும் குறைவான உறை நிலையிலும் சேமித்து வைக்க அறிவுறுத்தப்படுகிறது.

சைவ மற்றும் அசைவ உணவுகள், பச்சை உணவுகள், சமைக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றை ஒன்றோடொன்று கலந்துவிடாமல் இருக்கும்படி தனித்தனியான கொள்கலன்களில் சேமித்து வைக்க வேண்டும். பச்சை இறைச்சி மற்றும் சமைக்கப்பட்ட இறைச்சிகளை வெட்டுவதற்கு, தனித்தனியான கத்திகளையும் வெட்டுப்பலகைகளையும் பயன்படுத்த வேண்டும். உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் சுத்தமான ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.

உணவினை கையாளும் முன், கையாண்ட பின்பும், இருமல், தும்மல் வந்த பின்பும் தவறாது கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும். ஊழியர்கள் யாரேனுக்கும் வெட்டுப்பட்ட காயங்களோ, தீச்சுட்ட புண்களோ இருந்தால் நீர்ப்புகா துணியினை பயன்படுத்தி பட்டை போல் கட்டிக் கொள்ள வேண்டும்.

உடல்நலம் சரியில்லாத போது ஊழியர்கள் யாரும் உணவுப் பொருட்களை தொடக் கூடாது. மேஜைகள், டேபிள் சேர்கள், பாத்திரங்களை துடைக்க சுத்தமான மற்றும் தனித்தனியான துணிகளை வைத்திருக்க வேண்டும். கழிவுப் பொருட்களை கொட்ட மூடியுடன் கூடிய குப்பைத் தொட்டிகளை பயன்படுத்த வேண்டும். அதை உணவு தயாரிக்கும் பகுதியில் இருந்து தொலைவில் தள்ளி வைப்பதையும், நன்கு மூடப்பட்ட நிலையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments