காய்கறிக்கடைக்குள் ஆயுதம்..! 3 வது கண்ணால் சிக்கிய கொலை கும்பல்..!

0 3266
காய்கறிக்கடைக்குள் ஆயுதம்..! 3 வது கண்ணால் சிக்கிய கொலை கும்பல்..!

சென்னை மயிலாப்பூர் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை சம்பவத்தில், மகனின் கொலைக்கு பழிக்குப்பழி தீர்க்க சபதமிட்டு பெண் ஒருவர் களமிறங்கி மகனின் கூட்டாளிகளை வைத்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை மயிலாப்பூர் அப்பு தெருவில் ரியல் எஸ்டேட் அதிபரான கோபி என்கிற உருளை கோபி என்பவர் 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் செவ்வாய்கிழமை இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவர் சமீபத்தில் கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி மயிலாப்பூர் சிவகுமாரின் கூட்டாளி என்று கூறப்படுகின்றது.

இந்த கொலை தொடர்பாக கொலை நடந்த இடம் தொடங்கி நூற்றுகணக்கான சிசிடிவி காமிராக்களை ஆய்வு செய்த போது உருளை கோபியை கொலை செய்த கும்பல் இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்று நெசப்பாக்கத்தில் உள்ள ஒரு காய்கறிக் கடையின் ஷட்டரை திறந்து உள்ளே சென்று அங்கு அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பதுக்கிவிட்டு தலைமறைவானதை போலீசார் கண்டறிந்தனர்.

நெசப்பாக்கம் காய்கறிக் கடையில் இருந்து 5 அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்து அந்த கடையின் உரிமையாளர் அய்யப்பனிடம் சிறப்பு கவனிப்புடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த ஆண்டு மயிலாப்பூர் முண்டககண்ணி அம்மன் கோவில் அருகே பிரபல ரவுடி கிழங்கு சரவணனின் கூட்டாளியான மயிலாப்பூரைச் சேர்ந்த மணி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழி தீர்க்கவே இந்த கொலைச் சம்பவம் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மணி கொலையில் தொடர்புடைய ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் கொண்ட கும்பல் கைது செய்யப்பட்ட நிலையில் கொலையாளிக்கு உதவிய உருளை கோபியை பழி தீர்க்க மணியின் தாயான பாரதி சபதம் ஏற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது மகன் கொலை செய்யப்பட்டு ஓராண்டுக்குள் சபதத்தை நிறைவேற்றும் விதமாக தனது மகனின் கூட்டாளியான கிழங்கு சரவணன் உள்ளிட்டோர் உதவியுடன் உருளை கோபியை அந்த பெண் பழித்தீர்த்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

கிழங்கு சரவணனுக்கும், மயிலாப்பூர் ரவுடி சிவக்குமாருக்கும் நீண்ட காலமாக முன் விரோதம் இருந்து வந்தது. மயிலாப்பூரில் சிவா ஆதிக்கம் இருந்ததால், கிழங்கு சரவணன் தலை காட்டாமல் வெளியில் தங்கி வந்தான். சில மாதங்களுக்கு முன்பு சிவா கொலை செய்யப்பட்டதால், கிழங்கு சரவணன் மயிலாப்பூரில் மீண்டும் ஆதிக்கம் செலுத்த தொடங்கி இருப்பதாகவும், சிவாவின் ஆதரவாளர்களை தீர்த்து கட்ட முடிவு செய்ததாகவும், அதன் படியே சிவாவின் முக்கிய கூட்டாளியான உருளை கோபியை தற்போது தீர்த்துக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.

மயிலாப்பூர் சிவக்குமாருக்கு பைனான்ஸ் செய்வது தொடங்கி அவனது ஆதரவோடு போலி பத்திரங்களை உருவாக்கி உருளை கோபி நில அபகரிப்பில் ஈடுபட்டு வந்ததாகவும் போலீசார் கூறுகின்றனர்.மயிலாப்பூரில் பழிக்கு பழியாக தொடரும் கொலைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க தலைமறைவான ரவுடி கிழங்கு சரவணன் மற்றும் அவனது கூட்டாளிகளை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments