ஒரே காவல்நிலைய எல்லையில் அடுத்தடுத்து 2 கொலைகள்.. இருவரின் தலைகளும் துண்டிப்பு..! திருநெல்வேலியில் பயங்கரம்

0 3798

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்ப்பள்ளம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்த நாளில் இருவர் தலை துண்டித்து கொல்லப்பட்டு, தலைகளை தனியே எடுத்து வீசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்ப்பள்ளம் அருகே திடியூர் வடுகப்பட்டி காட்டுப்பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. அதன் அருகே திங்களன்று தலை துண்டிக்கப்பட்ட உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. இது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி விசாரித்ததில் கொல்லப்பட்டவர் கீழச் செவல் நயினார்குளத்தைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் என்பதும், மதுவாங்கிவிட்டு வந்தபோது அவரை மர்ம கும்பல் வழிமறித்து வெட்டிக் கொன்றிருக்கலாம் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

துண்டிக்கப்பட்ட அவரது தலையைக் கோபாலசமுத்திரம் அருகே காவல்துறையினர் கண்டெடுத்தனர். இது தொடர்பாகக் காவல்துறையினர் விசாரித்து வருவதுடன் தனிப்படை அமைத்துக் கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.  

இந்த நிலையில் அதிகாலை கோபாலசமுத்திரத்தில் வேளாண் பணிகளுக்கு இயந்திரங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்துவந்த மாரியப்பன் குளத்தங்கரை வழியாகச் சென்றபோது அவரைச் சிலர் வழிமறித்து வெட்டிக் கொன்றனர். தலை, ஒரு கால், ஒரு கை துண்டிக்கப்பட்ட நிலையில் உடல் கிடந்தது குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து சென்று உடலைக் கைப்பற்றினர்.

துண்டிக்கப்பட்ட தலை அருகே உள்ள காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. முன்னீர்ப்பள்ளம் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்து இருவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்டது அதிர்ச்சியைம் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோபாலசமுத்திரம், செவல், முன்னீர்ப்பள்ளம் ஆகிய பகுதிகளில் காவல்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கொலை நிகழ்ந்த இடத்தை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் நேரில் ஆய்வு செய்ததுடன் முன்னீர்ப்பள்ளத்தில் முகாமிட்டுத் தனிப்படைகளை அமைத்துக் கொலையாளிகளைத் தேடும் பணியைத் தீவிரப்படுத்தி உள்ளார். இரண்டு கொலைகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments