டீல் போட்டு கொலை சொகுசு விடுதியை விற்று பழிக்கு பழி..! இம்தியாஸ் இம்சையான பின்னணி

0 5446
டீல் போட்டு கொலை சொகுசு விடுதியை விற்று பழிக்கு பழி..! இம்தியாஸ் இம்சையான பின்னணி

வீட்டுக்கு அடங்காமல் கஞ்சா போதைக்கு அடிமையாகி திரியும் பதின்பருவ சிறுவர்களை கைக்குள் வைத்துக் கொண்டு, கஞ்சா விற்பனையை காட்டிக் கொடுத்தவரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் தேடப்பட்ட டீல் இம்தியாஸ்  மற்றும் அவனது கூலிப்படையினர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். 1 கோடி ரூபாய்க்கு சொகுசு விடுதியை விற்று இம்தியாஸ் பழிக்கு பழியாக செய்த கொடூர இம்சையின் பின்னணி குறித்து  விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு

வாணியம்பாடி ஜீவா நகரில் கஞ்சா விற்பனை பகிரங்கமாக நடப்பது தொடர்பாக போலீஸ் எஸ்.பி சிபி சக்கரவர்த்தியிடம் ரகசியமாக புகார் அளித்த மனிதநேய ஜனநாயக கட்சி பிரமுகர் வசீம் அக்ரம் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த கஞ்சா வியாபாரி டீல் இம்தியாஸ் தலைமையிலான கும்பலை காவல்துறையினர் தேடிவந்தனர்.

இந்த நிலையில் டீல் இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்திலும், அவனது கூலிப்படையினர் என்று சொல்லப்படும் அகஸ்டின், பிரசன்ன குமார், அஜய், சத்தியசீலன் , முனீஸ்வரன் , செல்வகுமார் ஆகிய ஆறு பேர் தஞ்சை மாவட்ட 3-வது நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்பு சரணடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில் போலீசாரின் விசாரணையில் டீல் இம்தியாஸ் கும்பலின் பின்னணி குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஆரம்பத்தில் சென்னை புறநகரான வண்டலூர், படப்பை பகுதியில் பழைய வாகனங்களை வாங்கி உடைக்கும் வியாபரம் செய்து வந்த இம்தியாஸுக்கு அங்குள்ள ரவுடிகளின் சகவாசத்தால் கட்டபஞ்சாயத்து கைகொடுத்துள்ளது. சில ஆண்டுகாளுக்கு முன்பு சென்னை காவல்துறையினர் ரவுடிகளை தீவிரமாக தேடும் போது தனக்கு தெரிந்த சில ரவுடிகளின் கைகால்கள் முறிக்கப்பட்டதை அறிந்து மிரண்டு போன இம்தியாஸ், அங்கிருந்து தனது இடத்தை பூர்வீகமான வாணியம்பாடி ஜீவா நகருக்கு மாற்றியதோடு ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்றுவந்ததாக கூறப்படுகின்றது.

மாஸ்டர் திரைப்படத்தில் வருவது போல கஞ்சாவுக்கு அடிமையான பதின்பருவ சிறுவர்களை தன்னை சுற்றி வைத்துக் கொண்டு அவர்களுக்கு போதைக்கு கஞ்சா, மது..! சாப்பாட்டுக்கு புரோட்டா, பிரியாணி..! ஊர் சுற்ற செலவுக்கு பணம்..! உடம்பை தேற்ற ஜிம் என்று சில்வண்டுகளை பட்டாளமாக வைத்துக் கொண்டு வாணியம்பாடியில் வலம் வந்த டீல் இம்தியாஸ் தன்னை பற்றி கானா பாடல்களை பாட வைத்து அதனை தனது வீடியோவுடன் டிக்டாக் போன்ற தளங்களில் பதிவிட்டுள்ளான்.
இவனுடன் இருக்கின்ற இளைஞர்கள் கையில் டீல் என்று பச்சைக் குத்திக் கொண்டு டீல் பிரதர்ஸ் என்ற பெயரில் வலம் வந்துள்ளனர்.

எந்த ஒரு விவகாரத்தையும் டீல் போட்டு முடிப்பதால் ஆதரவாளர்கள் மத்தியில் டீல் இம்தியாஸ் என்று அழைப்பதை வாடிக்கையாக்கியுள்ளனர்.ஆரம்பத்திலேயே டீல் இம்தியாசின் நடவடிக்கைகளை கண்காணித்து ஒடுக்கதவறிய காவல்துறையினரின் மெத்தனத்தால் வசீம் அக்ரம் கொல்லப்பட்டதாக கூறப்படுகின்றது. வசீம் அக்ரம் தான், கஞ்சா விற்பனையை போலீசுக்கு காட்டிக் கொடுத்தது என்பதை போலீசில் உள்ள ஒரு சில கருப்பு ஆடுகள் மூலம் அறிந்து கொண்ட இம்தியாஸ், 2 மாதமாக தலைமறைவாக இருந்தாலும் 15 நாட்களுக்கு முன்பாக தனது சகோதரியை நேரடியாக வசீம் அக்ரம் வீட்டுக்கே அனுப்பி கொலை செய்யப்போவதாக மிரட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக ஏலகிரி மலையில் உள்ள சொகுசு விடுதி ஒன்றை 1 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டு அதில் 50 லட்சம் ரூபாயை சகோதரிக்கு கொடுத்து விட்டு மீதம் உள்ள 50 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு கூலிப்படையினரை தயார் செய்து இந்த கொலையை இம்தியாஸ் செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவனுடன் சரண் அடைந்துள்ள அனைவரும் 19 வயதில் இருந்து 22 வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் என்றும் அனைவரும் வண்டலூர் சுற்றுவட்டார ரவுடிகளின் கையாட்களாக சுற்றிவந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது.

அதே நேரத்தில் கஞ்சா விற்பனையையும், ரவுடிகளையும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி படிப்பை பாதியில் விட்ட இளையதலமுறையை சீரழிவில் இருந்து காக்கவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments