கந்துவட்டியும்... கைகளை இழந்தவரின் குற்றச்சாட்டும்..!

0 2067
கந்துவட்டியும்... கைகளை இழந்தவரின் குற்றச்சாட்டும்..!

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த பெண் ஒருவரை கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சம்மந்தப்பட்ட பெண், ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்வதாகக் கூறி பணம் வாங்கி மோசடி செய்ததாக  ஒருவர் எதிர் புகாரளித்துள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த பிரவீனா என்ற பெண் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார்.

தனது தொழில் வளர்ச்சிக்காக கடந்த 2016ம் ஆண்டு கயத்தாரைச் சேர்ந்த முருகன் என்பவரிடம் இருந்து 6 பைசா வட்டிக்கு 6 லட்சம் ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். பிரவீனா சரியாக வட்டி கொடுத்து வருவதை பார்த்த முருகன், 6 பைசா வட்டியை 10 பைசா வட்டி கொடுக்க வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தொழில் முடங்கி, வட்டிகொடுக்க முடியமால் பரிதவிக்க, வேறு ஒரு நபரை கை காட்டி அவரிடம் பணம் பெற்று தனது வட்டியை அடைக்க வேண்டும் என முருகன் வற்புறுத்தியதாகக் கூறுகிறார் பிரவீனா.

இக்கட்டான சூழ்நிலையில் தவித்த பிரவீனா அவர் கூறிய நபரிடம் பணம் வாங்கி வட்டி கொடுக்க தொடங்கியதாகவும் அவருக்கு வட்டி கட்ட மற்றொருவரிடம் பணம் வாங்குவது என சுமார் 48 பேரிடம் சிக்கிக்கொண்டதாகவும் கூறுகிறார். நாள் வட்டி, வார வட்டி, மாத வட்டி என தனக்குச் சொந்தமான 100 சவரன் நகை, தனது தாயின் 40 சவரன் நகை, தனது தந்தையின் சேமிப்பு பணம் 20 லட்சம், தனது சகோதரனிடமிருந்து 19லட்ச ரூபாய், 10 செண்ட் நிலம் என அத்தனையையும் வட்டிக்காகவே இழந்ததாகவும் கூறுகிறார் பிரவீனா.

இப்படி 6 லட்ச ரூபாய்க்காக 3 கோடி ரூபாய் வரை இழந்ததில் சிலரது கடன் அடைந்ததாகவும் மீதமிருந்தவர்களில் 14 பேர்தான் தன்னை மேலும் மேலும் பணம் கேட்டு மிரட்டி வந்ததாகவும் கூறும் பிரவீனா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனையடுத்து அவரிடம் புகாரைப் பெற்ற போலீசார், அந்த 14 பேர் மீதும் கந்து வட்டிக் கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். பிரவீனாவுக்குக் கடன் கொடுத்தவர்களில் ஒருவர், அவரது சகோதரரிடம் வட்டிப் பணம் கேட்கும் ஆடியோவும் வெளியாகியுள்ளது.

பிரவீனாவின் குற்றச்சாட்டு இப்படி இருக்க, அவரால் வழக்குப்பதிவுக்கு உள்ளான 14 பேரில் ஒருவரான மதுரை மாவட்டம் எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்த இராம்குமார் என்ற இளைஞர், ஆன்லைன் ட்ரேடிங்கில் பணத்தை இருமடங்காக்கித் தருவதாகக் கூறி இரண்டரை லட்ச ரூபாய் பணம் வாங்கி பிரவீனாதான் மோசடி செய்ததாகக் கூறுகிறார். மின் விபத்து ஒன்றில் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் இரண்டு கைகளையுமே இழந்தவர் இராம்குமார். வெளிநாட்டு மருத்துவர்கள் மூலம் மீண்டும் கைகளைப் பொருத்த ஏற்பாடு செய்வதாகவும் பிரவீனா கூறியதாகச் சொல்கிறார் இராம்குமார். பிரவீனா மீது நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டுத் தரவேண்டும் எனவும் தன் மீதான புகாரை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் புகார் மனு அளித்துள்ளார்.

6 லட்ச ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதன் தொடர்ச்சியாக 3 கோடி ரூபாய் வரையிலான தனது பணம், சொத்துகளை இழந்ததாகக் கூறும் பிரவீனாவின் குற்றச்சாட்டு உண்மையா ? அல்லது அவருடனான வாட்சப் உரையாடல் ஆதாரங்களுடன் புகாரளித்திருக்கும் இராம்குமாரின் குற்றச்சாட்டு உண்மையா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments